தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்: மக்களவையில் கனிமொழி எம்பி வலியுறுத்தல்

சென்னை: தீப்பெட்டி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி தொகுதி திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசியதாவது: சமீபகாலமாக தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலதன பொருட்கள் கடுமையாக விலையேற்றம் கண்டிருக்கின்றன. தீப்பெட்டி தயாரிப்பு தொழில் என்பது 14 மூலப் பொருட்களைச் சார்ந்துள்ளது. இந்த அனைத்து மூலப் பொருள்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டன. இதனால் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது மக்களவைத் தொகுதியான தூத்துக்குடியிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் பத்து லட்சம் பேருக்கு இந்த தொழில் தான் வேலைவாய்ப்பை அளிக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இது குறித்து  ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியும் எந்த பதிலும் இல்லை. பல்வேறு திசைகளில் இருந்தும் தீப்பெட்டி தொழில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள இந்த நிலையில், எங்கள் கோரிக்கை என்னவென்றால் ஒன்றிய அரசு சட்டவிரோதமாக  ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கு உதவும் வகையில் இத்தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். தீப்பெட்டி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை