திருவாரூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் உறுப்பினராக சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சீர்மரபினர் தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குகண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோரர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ள சீர்மரபினர் இனத்தைச்சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவராகவும், தொழில் மற்றும் நிலமற்ற விவசாய கூலி தொழிலாளியாகவும் இருத்தல் வேண்டும். மேலும் இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கு புதியதாக விண்ணப்பிப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினராக பதிவுசெய்தோர்தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ளவதற்கும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்