திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா? திறந்துவிட பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர், ஏப்.11: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தினை பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் இயங்கி வருகிறது. இங்கு வெளிநோயாளிகளாக தினந்தோறும் 1,200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் நிலையில் உள்நோயாளிகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்தும நோயாளிகள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என நாள் ஒன்றுக்கு 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் கழிவறை வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தும் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை. மேலும் மருத்துவக் கல்லூரிக்கு சுண்ணாம்பு அடிக்கும் பணிகள் உட்பட எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நலன்கருதி மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதார வளாகம் ஒன்று கட்டப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். அதன்படி ரூ.27 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாக கட்டிடமானது திறந்து வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு இதுவரை வரவில்லை. எனவே, இந்த சுகாதார வளாகத்தினை நோயாளிகள் மற்றும் பொது மக்கள்நலன்கருதி பயன்பாட்டிற்கு திறந்துவிட மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி