திருவாதிரைப் பெருவிழா

ஆருத்ரா தரிசனம் : 30 – 12 – 2020மார்கழி மாதத்தில் மிருகசீரிஷ நட்சத்திரமும் நிறைமதி நாளான பௌர்ணமியும் ஒன்று சேர்ந்து வரும். அந்த இரவில் நடராசப் பெருமானுக்கு பெரிய அளவிலான அபிஷேகம் நடத்தி மறுநாள் திருவாதிரை அபிஷேகம் நடத்தி திருவாதிரையன்று நடராசப் பெருமானுக்கு விழா காண்பதே திருவாதிரை விழாவாகும்.காலம் கணக்கிட முடியாத காலத்திற்கு முன்பு அண்டத்தில் ஒரு பெரிய வெடிப்பு உண்டானதென்றும் அப்போது சிதறிய துகள்களில் இருந்தே இந்த பூமண்டலமும் பல நட்சத்திரங்களும் உண்டானதென்று கூறுகின்றனர். அப்போது தோன்றிய நட்சத்திரக் கூட்டத்தை திருவாதிரை என்பர். அதனால் திருவாதிரையை உலகப் படைப்பன்று தோன்றிய நட்சத்திரம் எனவும் கூறுவர். அந்த ஆதிரை விண்மீன் கூட்டத்தின் பெயரால் சிவபெருமான் ஆதிரையான் என்று அழைக்கப்படுகின்றான். இதையொட்டி ஆதிரை நாளில் நடராசப் பெருமானுக்கு திருவிழா எடுக்கும் வழக்கம் வந்ததென்பர். அத்துடன் பாவை நோன்பையும் சேர்த்து இந்நாளில் அது திருவெம்பாவை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்தில் திருவாதிரையைக் கடை நாளாகக் கொண்டு பெருந் திருவிழா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தென்னகச் சிவாலயங்கள் அனைத்திலும் திருவாதிரைவிழா பெருஞ் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்திலும் திருப்பெருந்துறையான ஆவுடையார் கோயிலிலும் இவ்விழா பெருந் திருவிழாவாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றன. சிதம்பரத்தில் முதல் எட்டு நாட்களில் சோமாஸ்கந்தர் பரிவாரங்களுடன் பவனி வருகிறார். ஒன்பதாம் நாள் காலை, நடராசப் பெருமானும் சிவகாமி அம்மனும் பெரிய தேர்களில் பவனி வருகின்றனர். அவர்களுடன் முருகர், விநாயகர், சண்டேஸ்வரர் ஆகியோர் சிறிய தேர்களில் பவனி வருகின்றனர். அன்று பின்இரவு தொடங்கி அதிகாலை வரை குடம் குடமாகப் பால், தயிர், தேன், சந்தனக் குழம்பு முதலியவற்றால் நடராசப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறும்.முற்பகலில் மிகுந்த அலங்காரத்துடன் பெருமானும் அம்பிகையும் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடியபடியே சிற்சபைக்கு எழுந்தருள்கின்றனர். அதுவே திருவாதிரை தரிசனம் என்றும், ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கப்படுகிறது.அதே வேளையில் திருப்பெருந்துறையில் ஆத்மநாதனுக்கும் ஆதிரைப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அங்கு ஆத்ம நாதராக மாணிக்கவாசகரைப் போற்றுகின்றனர். அவர் இடபம், பூதம், கயிலாய பர்வதம் முதலான பல வாகனங்களில் பவனி வந்து காட்சியளிக்கின்றார். விழாவின் இறுதி நாளில் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் உபதேசிக்கும் ஐதீகக் காட்சி நடைபெறுகின்றது. திருவாரூரில் ஆதிரை நாள் தனிச்சிறப்புடன் நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது. திருநாவுக் கரசு நாயனார் அந்த விழாவை ‘‘முத்து விதானம்’’ எனத் தொடங்கும் பாடலால் போற்றியுள்ளார். அது ஆதிரைப் பதிகம் என்றே போற்றப்படுகிறது.திருவாரூரில் தியோகேசப் பெருமானின் பாத தரிசனக் காட்சி நடைபெறுகின்றது. அதைக்காண விளமர் என்னும் ஊரிலிருந்து பதஞ்சலியும் வியாக்ரபாதரும் வருவதாகக் கூறுகின்றனர். தியாகேசர் திருவாதிரையன்று அதிகாலையில் சபையை விட்டு இறங்கி ராஜநாராயணன் மண்டபத்திற்கு வந்து பாத தரிசனம் காட்டி அருளுகின்றார். இரவு நடனம் ஆடியவாறே இருப்பிடத்தை அடைகிறார். தென்னக மெங்கும் திருவாதிரை விழா சிவாலயங்களில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.- ஆட்சிலிங்கம்…

Related posts

புதுக்கோட்டை புவனேஸ்வரி

காக்கும் கல்

கனவு இல்லத்துக்கு கைகொடுக்கும் இறைவன்