திருவள்ளூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர் ஆவடி நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். கே.ஜெயக்குமார் எம்பி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர்  எம்.ஏ.இளங்கோவன், துணை இயக்குநர் கு.ரா.ஜவஹர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்று(நேற்று) உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் சுழல்நிதி, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு இலவச பேருந்து பயண சலுகை, கூட்டுறவு கடன் ரத்து என பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்து, தேவையான மருந்துகள் மற்றும் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி, மருத்துவமனைக்கு வரமுடியாதவர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்த உடன் மொபைல் வாகனம் மூலம் அவர்கள் இல்லத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் பூண்டி, புலியூர், வெங்கல், அலமாதி, நாப்பாளையம் மற்றும் சீமாபுரம் ஆகிய பகுதிகளுக்காக ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட 6 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மருத்துவத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 26 மகளிர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். மேலும், பள்ளிப்பட்டு பகுதி 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முகாமில் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி, வாழ்த்தினார். இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.நாகூர் மீரான் ஒலி, மருத்துவர்கள் பிரபாகரன், ராஜேஷ், காந்திமதி, யுவராஜன், ஜெயதீபா, லாவண்யா பால மணிகண்டன், மதுமதி, பிரதீபா மற்றும் செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்