திருமுல்லைவாயல் அரபாத் ஏரிக்குள் மூட்டை மூட்டையாக இறந்த கோழிகள் வீச்சு: சுகாதார கேட்டால் மக்கள் அவதி

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையை ஒட்டி 65ஏக்கர் பரப்பளவில் அரபாத் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி மணிகண்டபுரம், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆரம்ப காலத்தில், இப்பகுதி மக்களுக்கு இந்த ஏரி குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து நீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஏரி கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. மேலும், கடந்த 10ஆண்டாக அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை சரிவர பராமரிக்கவில்லை. இதனால் ஏரி நீர் மாசடைந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், ஏரிகரை மற்றும் தண்ணீரில் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை பொதுமக்களில் சிலர் அடிக்கடி வீசி வருகின்றனர். இதனால், ஏரி பாழாகி வருகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏரி தண்ணீரில் இறந்த கோழிகளை மூட்டை மூட்டையாக சமூக விரோதிகள் வீசி சென்று உள்ளனர். இதனால், ஏரியில் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஏரியைச் சுற்றி குடியிருப்போருக்கும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், சி.டி.எச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இருந்த போதிலும், அதிகாரிகள் ஏரிக்குள் இறந்து கிடக்கும் கோழி மூட்டைகளை அப்புறப்படுத்தாமல் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக கோழி கழிவுகளை அப்புறப்படுத்திடவும், ஏரிக்குள் கழிவுநீர் விடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு