திருமணமான 5 மாதத்தில் கணவன் உயிரிழப்பு; வீட்டை விட்டு வெளியேற்றியதால் இளம்பெண் தர்ணா போராட்டம்: கேமரா மூலம் கண்காணிக்கும் குடும்பத்துக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: திருமணமான ஐந்து மாதத்தில் கணவன் உயிரிழந்த நிலையில், வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டதால் இளம்பெண் தர்ணா நடத்திவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்னபூர்ணா. இவருக்கும் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் வேலை பார்த்துவரும் பிரதீப்குமார், ஏழைப் பெண்ணான அன்னபூர்ணாவை வரதட்சணை எதுவும் வாங்காமல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், திருமணம் முடிந்த 5 மாதங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரதீப் குமார் உயிரிழந்ததால் அன்னபூர்ணா கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி விசாரித்தபோது, பிரதீப்குமாருக்கு கிட்னி கோளாறு, உயர் ரத்தழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் இருந்ததை மறைத்து திருமணம் செய்துவைத்தது தெரியவந்தது. இதன்பிறகு கணவர் வீட்டிலேயே அன்னபூர்ணா வசித்துவந்தார். இதனிடையே மாமியார் ஜமுனா, மாமனார் மற்றும் நாத்தனார் ஜெய, அவரது கணவர் திருமால் ஆகியோர் தொடர்ந்து அன்னபூர்ணாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். படுக்கை அறையில் இருக்கும்போது வெளியில் தாழிடுவது,  சாப்பாடு கொடுக்காமலும் குடிநீர் வழங்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். இவர்கள் கொடுமையில் இருந்து தப்பிக்க  சில நாட்களாக வேலைக்கு சென்றுள்ளார். இதனால் அன்னபூர்ணாவை மாமனார், மாமியார் ஆகியோர் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இந்த நிலையில், நேற்று அன்னபூர்ணா வேலைக்கு சென்றபிறகு வீட்டை பூட்டிவிட்டு மாமனார், மாமியார் ஆகியோர் நாகர் கோவிலில் உள்ள நாத்தனார் ஜெய வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. வேலை முடிந்து வந்த அன்னபூர்ணா வீடு பூட்டியிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை  பார்த்து அக்கம்பக்கத்தினர் வந்ததால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி அன்னபூர்ணா கூறுகையில், ‘’நாகர்கோவிலில் உள்ள நாத்தனார் வீட்டுக்கு மாமனாரும் மாமியாரும் சென்றுவிட்டதால் தங்குவதற்கு இடமில்லாமல் உள்ளேன். செவ்வாப்பேட்டை காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், முதல்வரின் தனிப்பிரிவு என அனைத்து இடங்களிலும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. என் கணவருக்கு உள்ள பிரச்னை பற்றி தெரிவிக்காமல் திருமணம் செய்துவைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை அவதூறாக பேசியதுடன் கண்காணிப்பு கேமரா மூலம் நாகர்கோவிலில் இருந்து என்னை கண்காணிக்கும் நாத்தனார் ஜெய, அவரது கணவர் திருமால் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் வீட்டில் என்னை வாழ அனுமதிக்க வேண்டும்’’ என்றார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்