திருமணத்தை தாண்டிய உறவு தகராறில் காதலியை வெட்டிக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை: தேனி நீதிமன்றம் தீர்ப்பு

தேனி, செப். 7: திருமணத்தை தாண்டிய உறவு தகராறில், காதலியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், தேவாரத்தில் உள்ள டிவிகே பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ஜோதிலட்சுமி (39). கணவர் இறந்த நிலையில் ஜோதிலட்சுமி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், ஜோதிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் முத்துக்குமாருக்கும் (39), தகாத உறவு ஏற்பட்டது. அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 2020 மார்ச் 5ம் தேதி ஜோதிலட்சுமியை சந்தித்த, முத்துக்குமார் திடீரென அரிவாளால், அவரை சரமாரியாக வெட்டினார். இதில், ஜோதிலட்சுமிக்கு கை, கால், தலை என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில், தேவாரம் போலீசார் முத்துக்குமார் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில், நீதிபதி கவிதா முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராமசாமி ஆஜரானார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கவிதா, ‘ஜோதிலட்சுமியை வெட்டிய முத்துக்குமாருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால், மேலும், ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்