திருப்பூரில் 1,275 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்

 

திருப்பூர், செப்.13: திருப்பூரில் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்தி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1,275 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில், திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மாவட்ட எல்லையிலும், வௌிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்மந்தமாக தீவிரமாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருப்பூர் ஆய்வாளர் மேனகா, சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணன், கார்த்தி மற்றும் போலீசார், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக ஊத்துக்குளி தாலுகா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முரட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில், அங்கு சோதனை செய்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து இறக்கி கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆவாரங்காடு கிழக்கு பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகள் மற்றும் 25 கிலோ எடை கொண்ட 1 மூட்டை என சுமார் 1,275 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை