திருப்பரங்குன்றம் தோப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட 2 மருத்துவமனைகளுக்கு பூட்டு

திருமங்கலம்/ திருப்பரங்குன்றம், ஆக. 4: திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர், தனக்கன்குளம் பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு புகார் வந்தது. இதையடுத்து இப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தோப்பூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த மருத்துவமனை, லேப் ஆகியவற்றில் நேற்று முன்தினம் சுகாதாரத்துறையினர் சோதனையிட்டனர். இதில் டாக்டர்கள் இன்றி நர்சுகள் மூலமாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதேபோல் அப்பகுதியில் இயங்கிய மற்றொரு மருத்துவமனை, லேபில் மற்றொரு மருத்துவர்கள் பெயரில் அனுமதியின்றி மருத்துவமனை இயங்கியது தெரியவந்தது.

இதில் பணியாற்றிய மருத்துவர் வெளிநாட்டில் டாக்டர் பயின்று தமிழகத்தில் முறையாக பதிவு செய்யாமல் சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசார் இந்த 2 மருத்துவமனைகள், மருந்து கடைகள், லேப்புகளில் சோதனையிட்டனர். உரிய அனுமதி பெற்ற பின்பு மருத்துவமனை, மருந்தகங்களை நடத்துமாறு அறிவுறுத்தி அவற்றை பூட்டி சாவிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், ‘உரிய அனுமதியின்றி செயல்படும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இல்லாமல் இயங்கும் மருத்துவமனைகளை கொண்டு மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்