திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி பக்தர்களிடம் ‘கூகுள் பே’ மூலம் ₹4.5 லட்சம் மோசடி செய்த புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று அபிஷேக சேவை நடைபெறுகிறது. இந்த சேவையின்போது சுமார் 40 நிமிடம் மூலவர் சன்னதி அருகே அமர்ந்து தரிசனம் செய்யலாம். இந்த சேவையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த டிக்கெட்கள் தற்போது குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் அபிஷேக ேசவையில் பங்கேற்க திட்டமிட்டனர். இதுதொடர்பாக விசாரித்தபோது, திருப்பதியை சேர்ந்த புரோக்கர் சரவணா என்பவர் தரிசன டிக்கெட் வாங்கித்தருவதாக தகவல் கிடைத்தது. அவரை தொடர்பு கொண்டு 9 பேருக்கு அபிஷேக டிக்கெட் கேட்டுள்ளனர்.இதையடுத்து சரவணா கூறிய ‘கூகுள் பே’ எண்ணில் ₹4.5 லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் சரவணா டிக்கெட் தரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த 3 குடும்பத்தினர், சரவணாவுக்கு போன் செய்துள்ளனர். அப்போது சரவணா போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த 3 குடும்பத்தினர் தனித்தனியாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் திருமலை 2வது டவுன் போலீசார், புரோக்கர் சரவணா மீது 3 வழக்குகள் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்….

Related posts

ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

உ.பி.யில் 121 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாமியார் போலே பாபா: 5 நட்சத்திர ஆசிரமம்; ரூ.100 கோடி சொத்துகுவிக்கப்பட்டது அம்பலம்

முறைகேடு புகார் காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்