திருப்பதியில் 6ம் நாள் பிரமோற்சவத்தையொட்டி ஹனுமந்த வாகனத்தில் அருள்பாலித்த கோதண்டராமர்-திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை : கோதண்டராம சுவாமி கோயில் 6ம் நாள் பிரமோற்சவத்தில் ஹனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பிரமோற்சவத்தின் 3ம் நாளான கடந்த 15ம் தேதி சிம்ம வாகனத்தில் கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரமோற்சவத்தின் 4ம் நாளான 16ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்தில் கோதண்டராம சுவாமி சீதா லட்சுமணர் சமேதராக கோயிலில் எழுந்தருளினார். வாகன சேவையை தொடர்ந்து காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. அதில், சீதா லட்சுமணருடன் கோதண்டராமருக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 முதல் 7 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணி முதல் 9 மணி வரை சர்வ பூபால வாகனத்தில் கோதண்டராம சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் 5ம் நாளான நேற்று முன்தினம் கருட வாகனத்தில் கோதண்டராம சுவாமி வைகுந்த ராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று ஹனுமந்த வாகனத்தில் கோதண்டராம சுவாமி ஸ்ரீ கோதண்டராமர் அலங்காரத்தில் வான சவாரியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், பெரிய ஜீயர், சின்ன ஜீயர், கோயில் சிறப்பு துணை செயல் அதிகாரி பார்வதி, உதவி செயல் அதிகாரி துர்காராஜூ, கண்காணிப்பாளர் ரமேஷ், கோயில் ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

Related posts

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்; சிஐஎஸ்எப் வீரருக்கு ‘பளார்’ விட்ட பெண் ஊழியர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்