திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சுமார் 2000 வருட பழமையானது. பிறவி நோய் தீர்ப்பதற்கும் அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். மேலும் இங்கு உள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு அமாவாசை நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைவதுடன் வாழ்க்கையில் முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மட்டுமே ஒரே கல்லிலால் ஆன கஜசம்ஹார மூர்த்தி சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்-5ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. திருப்பணிகள் நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் மேற்பார்வையில் பணிகள் நிறைவு பெற்றது. இந்நிலையில் 28ம் தேதி (நாளை) புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30க்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நான்கு வீதிகளுள்ள பிள்ளையார்கள் மற்றும் அரச மரத்தடி பிள்ளையார், காளியம்மன் கோவில் ஆகிய சுற்றுக் கோயில்களுக்கு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 6ம் கால யாக பூஜை முடிவடைந்து ராஜகோபுரம், கட்டக்கோபுரம், மூலவர் விமானம், அம்பாள் விமானம், அம்பாள் ராஜகோபுரம்,வேதாரண்யேஸ்வரர், தியாகராஜர் விமானம் உள்ளிட்ட 27 விமானங்களுக்கு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் மணவழகன், செயல் அலுவலர் முருகையன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல்கால யாக பூஜை தொடங்கியது. இதில் கோயில் செயல் அலுவல் முருகையன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி