திருத்தணி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

 

திருத்தணி: திருத்தணியில் உள்ள விநாயகர் கோயிலின் உண்டியலை உடைத்து காணிக்கையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணியிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதியில் கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் செலுத்தப்படும் காணிக்கைகள் வருடத்திற்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதனடிப்படையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நிறைவுபெற்றதையடுத்து இக்கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி விரைவில் தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் கோயில் பக்கவாட்டில் இருந்த இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து, வழக்கம்போல் நேற்று காலை கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற கோயில் பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் திருத்தணி காவல் நிலையத்தில் கோயில் உண்டியல் காணிக்கை திருடு போனது குறித்து புகார் செய்யப்பட்டது. அதே நேரத்தில், அப்பகுதியில் உள்ள மாதவன் என்பவர் சென்னையில் வசித்து வரும் நிலையில் அவரது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த வீட்டினுள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அவர் வீட்டில் நகை, பணம், விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்