திருத்தணி கோட்டத்தில் 1680 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார்

திருத்தணி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எரிசக்தி துறை மானிய கோரிக்கையின்போது விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்பேரில் திருத்தணி கோட்டத்துக்கு உட்பட்ட 2003 முதல் 2013ம் ஆண்டுவரை புதிய இலவச விவசாய மின் இணைப்பு பதிவு செய்யப்பட்டுள்ள 2,606 விண்ணப்பதாரர்களுக்கு 30 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 1680 விவசாய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆவணங்கள் சரியான முறையில் ஒப்படைத்தனர்.  இந்நிலையில், அதற்கான இணைப்பு வழங்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக திருத்தணி கோட்டத்திற்கு 1500 இலவச விவசாய பம்பு செட் மின் இணைப்புகள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி 1680 விவசாயிகளுக்கு இலவச புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா நடந்தது. இதனை காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்தார். இதற்காக திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு 3 திருமண மண்டபங்களில் காணொலி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.  நேற்று காலை 10 மணியளவில் முதல்வர் இத்திட்டத்தை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். திருத்தணியில் இந்நிகழ்ச்சிக்காக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வாங்குவதற்கான சான்றுகளை வழங்கினார். முன்னதாக திருத்தணி கோட்ட பொறியாளர் பாரிராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி ஒன்றியக்குழு தலைவர் தங்க தனம், நகராட்சி துணைத் தலைவர் ஆ.சாமிராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, ஜி.ரவீந்திரா, நகராட்சி கவுன்சிலர்கள் அப்துல்லா, அசோக்குமார், லட்சுமிபுரம் துணைத்தலைவர் குமரவேலன் ஆகியோர் விவசாயிகளுக்கு இலவச புதிய விவசாய மின் இணைப்பு ஆணைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கோட்ட பொறியாளர் கணகராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, முருகபூபதி, கோடீஸ்வரி,  ராஜேந்திரன், இளநிலை பொறியாளர்கள் அமிர்தம், தமிழரசன், ரவிக்கிரன், ஆறுமுகம்,  கேசவன், புஷ்பராஜ், சுப்பிரமணி, பாண்டியன், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!