திருச்சுழி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்

திருச்சுழி, ஏப்.13: திருச்சுழி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபாரதம் விதித்து, நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சுழி பகுதியில் வாகனங்களில், ஏர் ஹாரன்களை பொருத்தி, அதிக ஒலி எழுப்பி, பதற்றத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் அனைத்து வாகனங்களும் தற்போது, திருச்சுழி நகருக்குள் வந்து செல்வதால், நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது இயல்பான ஒன்றாக உள்ளது. இத்தகைய நெரிசல் மிகுந்த போக்குவரத்தில், சில வாகன ஓட்டுனர்களின் செயல், பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதில், ஏர் ஹாரன் எனப்படும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்க விட்டு, இடையூறு செய்கின்றனர். மருத்துவமனைகள், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் அதிக ஓசையை எழுப்புகின்றனர்.

சில தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களிலும் இத்தகைய ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின்படி, 70 டெசிபல் அளவுக்கு, ஒலி எழுப்பும், ஒலிப்பான்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து துறையினர் இது குறித்து ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் இத்தகைய ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். மேலும் இப்பகுதியில் கல்குவாரிகள் அதிகம் இருப்பதால் விபத்து ஏற்படும் வகையில் அதிகம் பாரங்களை ஏற்றிச் செல்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்து வந்தனர். இதையடுத்து நேற்று அருப்புக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் திருச்சுழி பகுதிகளில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பதிவெண் பலகையில் பெயர் மற்றும் தலைவர்களின் படம் பொறிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் கூறுகையில், ‘விதிகளை மீறி, அதிக ஒலி எழுப்பும், ஏர் ஹாரன்கள் மற்றும் கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவது திருச்சுழி பகுதியில் தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்க இனிமேல் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும். விதிமீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை