திரிபுரா மாநிலத்தில் ஆட்டம் காணும் பா,ஜ.க. கூட்டணி அரசு!: அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வலைவீச்சு..!!

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானதால் அதிருப்தியாளர்கள் உடன் பாஜக மேலிட தலைவர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு வலை விரித்து மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி கொடுத்த பாஜக தலைமை திரிபுராவில் இதே சூழலை எதிர்கொண்டுள்ளது. 
அண்மையில் பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய முகுல் ராய், திரிபுராவில் உள்ள தன்னுடைய நண்பர்களான பாஜக எம்.எல்.ஏக்கள் சிலருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மேலிடம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் மேலிட பிரதிநிதி பணிந்த்ராநாத்-தை திரிபுராவிற்கு அனுப்பி வைத்தனர். 
அகர்தலாவுக்கு விரைந்து சென்ற இருவரும் பாஜக அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். முதலமைச்சர் பிப்லப் தேவுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி தூக்கினர். அவர்களை சமாதானம் செய்த மேலிட தலைவர்கள் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இடம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். 
முன்னாள் அமைச்சரும், பாஜக  எம்.எல்.ஏவுமான சுதீப் ராய் வர்மன், முகுல் ராய்க்கு நெருக்கமானவர், அவரது தலைமையில் உள்ள அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவரும் பணியில்  முகுல் ராய் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 
இதனால் எந்த நேரத்தில் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018ல் நடைபெற்ற திரிபுரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 36 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான ஐ.டி.எப்.டி. 8 இடங்களையும் கைப்பற்றி ஆட்சி அமைத்தன. 

Related posts

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு