தலைமை செயலகம் அருகே உள்ள பார்க்கிங்கில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு: சாலை, நடைபாதையில் நிறுத்தப்படும் அவலம்

தண்டையார்பேட்டை: தலைமை செயலகம் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் திடீரென அனுமதி மறுத்துள்ளதால், வாகனங்களை சாலையில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வடசென்னைக்கு உட்பட்ட மண்ணடி, சவுகார்பேட்டை, பாரிமுனை, தங்கசாலை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தினசரி காலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள பூங்காவில்  நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது வழக்கம். இவ்வாறு வருபவர்கள், தலைமை செயலகம் எதிரில் உள்ள வாகன நிறுத்த பகுதியில் தங்களது கார், பைக்குகளை நிறுத்தி வந்தனர். இந்நிலையில், சமீப காலமாக இந்த வாகன நிறுத்த நுழைவாயில் பகுதியில் போலீசார் நின்றுகொண்டு, அங்கு வரும் வாகனங்களை உள்ளே அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், காலை நேரங்களில் உடற்பயிற்சிக்கும், நடைபயிற்சிக்கும் வரும் பொதுமக்கள் சாலையோரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் கூறுகையில், ‘‘தலைமை செயலகம் அருகில் உள்ள பார்க்கிங் பகுதியில் நீண்ட காலமாக நாங்கள் வானங்களை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். தற்போது, அங்கு போலீசார் நின்றுகொண்டு, வானங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். இதுபற்றி கேட்டால், காலை 9 மணிக்கு மேல்தான் வாகனங்களை உள்ளே அனுமதிக்க முடியும். இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அல்ல. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். எனவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி நினைத்த நேரத்தில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று  கூறுகிறார்கள். காலை நேரங்களில் இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் சாலையோரம் மற்றும் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள பார்க்கிங் பகுதியில் காலை நேரத்தில் வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்