தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் நிறைவு..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று, வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றுள்ளது. அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்த சூழலில் இன்றைய தினத்திற்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் இருந்து பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் தாக்கல் செய்து ஏற்கப்பட்டிருந்த வேட்பு மனுக்களை குறிப்பிட்ட வேட்பாளர்கள் திரும்ப பெறக்கூடிய நிகழ்வானது நடைபெற்று வந்தது. தற்போது வேட்புமனு தாக்கல் பெறுவதற்கான கால அவகாசம் என்பது நிறைவடைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மாலை 5 மணி முதல் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு