தமிழ்நாடு நம்பர் 1

எப்போதும் தமிழகம் நம்பர் 1. இப்போதும் அந்த இடத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் முதல்வரின் தனிப்பட்ட செயல்பாடுகள் தரவரிசை பட்டியலில் 19வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது அதை மாற்றி நம்பர் 1 இடத்திற்கு உயர்ந்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடு குறித்து ‘ஸ்டேட் ஆப் தி ஸ்டேட்ஸ்’ என்ற பெயரில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வரும் இந்தியா டுடே இதை தெரிவித்து இருக்கிறது. பொருளாதாரம், மருத்துவம், விவசாயம், கல்வி ஆகியவை உள்பட முக்கிய பிரிவுகளில் ஒட்டுமொத்த சிறந்த செயல்பாடு அடிப்படையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இமாச்சலப்பிரதேசம் 2வது இடத்திலும், கேரளா 3வது இடத்திலும், குஜராத் 4வது இடத்திலும் உள்ளன. 12 பிரிவுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 9 பிரிவுகளில் தமிழகம் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது. ஒருமித்த வளர்ச்சியில் முதல் இடத்தையும், பொருளாதாரத்தில் குஜராத்துக்கு அடுத்தபடியாக 2வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த 16 மாதங்களில் மட்டும் திமுக அரசு 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.2.23 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. 3 லட்சத்து 44 ஆயிரத்து 150 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 5 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலமாக 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 லட்சம் இளைஞர்களை தொழில் துறைக்கு தயார்ப்படுத்தும் தமிழக அரசின் ’நான் முதல்வன்’ திட்டம் மூலம் இதுவரை 1,027 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 1 லட்சத்து 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 சதவீத மானியம் வழங்கும் ‘கலைஞரின் அனைத்து கிராம வேளாண் விரிவாக்கத் திட்டம்’, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்’, ரூ.7000 ஆயிரம் கோடியில் பள்ளிகளை தரம் உயர்த்தும் ‘பேராசிரியர் அன்பழகன் திட்டம்’, சாலை விபத்து மரணங்களை தடுக்கும் ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’, ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் மூலம் மக்களிடம் குறைகளைப் பெற்று நடவடிக்கை எடுப்பது போன்ற அரசின் முடிவுகளை பாராட்டியுள்ள இந்தியா டுடே, முந்தைய ஆட்சியை விட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது. நான் நம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமை இல்லை. தமிழகம் நம்பர் 1 இடத்தை பிடிப்பதே எனக்கு பெருமை என்று எப்போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார். இன்று அவர் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஏனெனில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது….

Related posts

தடை விலகியது

தங்க அம்பாரி

போர் உச்சக்கட்டம்