தமிழகம் முழுவதும் 34,00,235 சதுர அடி சுத்தம் செய்து பராமரிப்பு மருத்துவமனைகளில் 91,538 கிலோ உயிர் மருத்துவ கழிவுகள் அகற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அளவிலான மருத்துவமனைகள், உயர் சிகிச்சைகளை அளிக்கும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 2672 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் அனைத்திலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 46,000 பேர் உள்நோயாளிகளாகவும்  சிகிச்சை  பெற்று பயன்பெறுகின்றனர். மேலும் 1,500 குழந்தை பிறப்புகளும் நிகழ்கின்றது.இப்படி, அரசின் மருத்துவச் சேவைகளை பெறுதவற்கு வரும் பல லட்சக்கணக்கான பயனாளிகளின் அரசு மருத்துவமனைகளை பற்றிய மதிப்பீடுகள் சிறப்பாக அமைய, மருத்துவமனைகள் தூய்மையுடனும், முறையான பராமரிப்புகளுடனும் மற்றும் இயற்கை அழகுடன் கூடிய பின்னணியில் செயல்படுவது அவசியமாகும். மருத்துவச் சேவைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சைப் பிரிவுகள், உள் நோயாளி பிரிவுகள், வெளிநோயாளி பிரிவுகள் என வகைப்படுத்தப்பட்டு அதற்கு உரிய தனித்தன்மையுடன் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டு பராமரிக்கப்படுகிறது. எனவே இப்பிரிவுகளில் மருத்துவமனையில்  சுத்தம் செய்யும் முறை மணிக்கு ஒருமுறை என்ற விகிதம் முதல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை என தேவையின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் நோய்த்தொற்றை அதிகப்படுத்தும் பூச்சிகள், எலிகள், சுற்றி திரியும் விலங்குகள், கொசுக்கள் ஆகியவற்றையும்  கட்டுப்படுத்துவது முக்கிய நடவடிக்கை ஆகும்.அரசு மருத்துவமனைகள் சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் தினந்தோறும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை மேலும் வலுப்படுத்த, பிற துறைகளின் உதவியுடன் மருத்துவமனை வளாகங்களை தூய்மைப்படுத்தவும், பராமரிக்கவும்  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற  குறிக்கோளுடன் கூடிய இப்பணி “ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை” நடைபெறும். மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை என இந்த இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் பராமரிக்கப்படும்.இது தொடங்கப்பட்ட ஏப்ரல் 1ம் தேதி ஒரு நாளில் தமிழ்நாட்டில் 5,120 சுகாதாரத்துறை பணியாளர்கள், 2,179  உள்ளாட்சியமைப்பு ஊழியர்கள் மற்றும்  1,134 தொண்டு நிறுவன பணியாளர்கள் இச்சேவையில் உட்படுத்தப்பட்டு 6,596 கழிவறைகள் சுத்தம் செய்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம் முதல் நாளில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில், 34,00,235 சதுர அடி மருத்துவமனை பரப்புகள் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் 91,538  கிலோ எடையுள்ள  உயிர் மருத்துவக் கழிவுகளும் நெறிமுறைகளின்படி சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை