தமிழகத்தில் முதன் முறையாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்து தயார்

உலகில் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலால் இயக்கப்படுகிறது. இப்படி இயக்குவதால் வாகனங்களில் இருந்து வரும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்த சூழலில் தற்போதுள்ள வாகனங்களில் சிறிதளவு வடிவமைப்பை மாற்றினாலே போதும், எல்பிஜி (லிக்கியூடு பெட்ரோல் கேஸ்) எரிவாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும். அதே சமயம் சிஎன்ஜி எனப்படும் கம்பரஸ்டு நேச்சுரல் கேஸ் அதாவது இயற்கை எரிவாயு காய்கறிகள் கழிவு, தாவரங்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் பெரிய அளவில் இன்ஜின்களை மாற்றம் செய்தால் மட்டுமே பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இதனை பயன்படுத்த முடியும். அதன்படி, முழுக்க முழுக்க சிஎன்ஜி கேஸ் மூலம் இயங்கும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக பல்லடத்தில் தனியார் பயணிகள் பேருந்து வடிவமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து  பொதுமக்களுக்காக விரைவில் புளியம்பட்டியில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் வரை 29 கிமீ தூரத்திற்கு வழித்தடம் எண் 23ல் பேருந்து பயண சேவை துவங்குகிறது. இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பி.கோவிந்தராஜன், ஜி.பி.கோகுல்நாத் ஆகியோர் கூறியதாவது: சிஎன்ஜி எனப்படும் கம்பரஸ்டு நேச்சுரல் கேசில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பேருந்து என்னும் பெருமை பெற்றுள்ளது. இந்த பேருந்தில் 600 லிட்டர் டீசல் பிடிக்கும் வகையிலான 90 கிலோ சிஎன்ஜி கேஸ் பிடிக்கும் வகையில் 4 கேஸ் கிட் பொருத்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசலுக்கு ரூ.94 ஆகிறது. கேஸ் 1 கிலோ ரூ.82 தான் ஆகிறது. டீசல் மூலம் இயக்கினால் ஒரு லிட்டருக்கு மூன்றரை கிமீ தூரம் தான் இயக்க முடியும். அதே சமயம் சிஎன்ஜி கேஸ் மூலம் 5 கிமீ தூரம் இயக்க முடியும். எரிபொருள் செலவும் குறைகிறது. கிலோ மீட்டரும் அதிகம் கிடைக்கிறது. எரிபொருள் விலை வித்தியாசத்தால் 1 லிட்டருக்கு ரூ.12 சேமிக்கப்படுகிறது. மேலும் 1 லிட்டருக்கு 12 கிமீ கூடுதலாக மைலேஜ் கிடைக்கிறது. 12 மணி நேரம் பேருந்து இயக்கத்தில் புளியம்பட்டியிலிருந்து பல்லடம் வழியாக திருப்பூருக்கு 10 சிங்கில் இயக்கினால் முன்பு 3 ஆயிரம் பயணிகள் பேருந்தில் பயணம் செய்வர். கொரோனா கால கட்டத்தில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மேலும் அரசு டவுன் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிப்பால் தற்போது 2 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது முன்பு 10 சிங்கில் ஒடினால் ரூ.14 ஆயிரம் வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.11,800 கிடைக்கிறது. ஒரு நாள் செலவு பார்த்தால் 280 கிமீ தூரத்திற்கு 74 லிட்டர் டீசல் ரூ.7ஆயிரம், ஒட்டுநர், நடத்துனர் சம்பளம் ரூ.2 ஆயிரம், அரசு வரி ரூ.333, இன்ஸ்சூரன்ஸ் ரூ.317, வண்டி தேய்மான செலவு ரூ.300 மொத்த செலவு ரூ.9950 எல்லாம் செலவு போக ஒரு நாளைக்கு ரூ.850 கிடைக்கும். ஒரு பேருந்து வாங்க ரூ.42 லட்சம் செலவாகும். இதற்கு வங்கி வட்டி கணக்கு போட்டால் வருமானம் போதாது. அதே சமயம் பயணிகள் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்த வாய்ப்பு இல்லை. அதனால் செலவை குறைத்து வருமானத்தை பெருக்க சிஎன்ஜி கேஸ் கிட் பொருத்தியுள்ளோம். மாட்டு சாணம் மூலம் கிடைக்கும் கேஸ்சில் இந்த பேருந்தை இயக்க முடியும். சிஎன்ஜி கேஸ் கிட் பேருந்து புதியதாக வடிவமைக்க மொத்தம் ரூ.40 லட்சம் செலவாகும். எங்களது பேருந்து சேவை மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்க முடியும். அனைவரும் இதே போன்று மாறினால் புதியதோர் மாற்றம் பசுமை வளத்தையும், செழிப்பையும் ஏற்படுத்தும். விரைவில் எங்களது பேருந்து சேவை தொடங்கும் என்றார்….

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !