தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மழையால் கூலிங் பீர் விற்பனை 30 சதவீதம் சரிவு: அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட 30% கூலிங் பீர் விற்பனை சரிந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,380 டாஸ்மாக் கடைகளும், கடைகளை ஒட்டி 3,240 பார்களும் இயங்கி வருகின்றன. நாள்தோறும் ₹85 கோடி முதல் ₹90 கோடி வரையில் மதுவிற்பனை நடக்கிறது. இதில், ₹25 கோடி வரையில் பீர் விற்பனையாகிறது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்ததால் வெயிலை தாங்க முடியாமல் டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 20 சதவீதமும், மே மாதம் 25 சதவீதமும், ஜூன் மாதம் 40 சதவீதமும் கூலிங் பீர் விற்பனையானது. இந்நிலையில், தற்போது சென்னை உள்பட தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் கூலிங் பீர் விற்பனை சரிவை கண்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் 30% வரை கூலிங் பீர் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொளுத்தும் வெயிலால் கடந்த மாதம் 40 முதல் 45% வரை டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் விற்பனை அதிகரித்தது. எனவே, கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பிராந்தி மற்றும் பீர் வகைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்தநிலையில், வெயில் குறைந்து மழை பரவலாக பெய்து வருவதால் கூலிங் பீர் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்த விற்பனையில் 20 சதவீதமும், மதுரை, சேலம் மண்டலங்களில் 15 சதவீதமும், கூலிங் பீர் விற்பனை சரிந்துள்ளது. தமிழகம் முழுவதும் 30% வரை கூலிங் பீர் விற்பனை சரிந்துள்ளது. இதேபோல், மீடியம் பிராந்தி வகைகளின் விற்பனையும் வழக்கத்தை விட குறைந்துள்ளது. பருவமழை காலம் தொடங்கினால் இந்த விற்பனையும் பாதியாக குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு