தமிழகத்தில் கைதிகளின் பாதுகாப்பு கருதி முதன்முறையாக ஆயுதப்படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்-வேலூரில் எஸ்பி தொடங்கி வைத்தார்

வேலூர் : கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் முதன்முறையாக வேலூரில் ஆயுதப்படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியை எஸ்பி நேற்று தொடங்கி வைத்தார்.தமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளின்கீழ் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் ஆயுதப்படை போலீசார் கோர்ட்டிற்கு அழைத்துசெல்வார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் விவிஐபி, விஐபி மற்றும் கோர்ட்டிற்கு அழைத்துச்செல்லப்படும் சிறை கைதிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை அழைத்துச்செல்லப்படும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி வேலூர் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் விஐபிக்கள் மற்றும் கைதிகளை அழைத்துச்செல்லும் 36 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியை தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளங்கோ செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இதனை எஸ்பி ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக எஸ்பி கூறியதாவது:ேவலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் உள்ளூர் காவல்நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் முதன்முறையாக வேலூர் மாவட்டத்தில் தான் ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி வாகனங்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை தனியார் நிறுவனம் பொருத்தியுள்ளது.இதன்சோதனை ஓட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூரில் இருந்து திருச்சி சிறைக்கு அழைத்துச்செல்லும் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது. இதன்மூலம் சிறை வளாகத்தில் இருந்து திருச்சிக்கு செல்வதற்குள் அந்த வாகனம் எந்த வழியாக சென்றது?, எங்கெல்லாம் நின்றது?, வாகனத்தின் வேகம் மற்றும் வாகனம் சென்றடைந்த நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அறிந்துகொண்டோம். இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளதால் தற்போது ஆயுதப்படையில் உள்ள 36 வாகனங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. சிறையில் இருந்து கோர்ட்டுக்கு கைதிகளை அழைத்துச்செல்லும்போது சம்பந்தம் இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. மேலும் முக்கிய பிரமுகருக்கு பாதுகாப்புக்கு செல்லும் காவல்துறை வாகனங்கள் எங்குள்ளது? எத்தனை மணிக்கு வருவார்கள் என்பது குறித்து துல்லியமாக தெரியவரும்.  ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தி உள்ள இந்த வாகனங்கள் கண்காணிக்கப்படும். கைதிகளின் நலன்கருதி இந்த திட்டம் அமல்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை டிஎஸ்பி மனோகரன், ஆய்வாளர் முகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்