தமிழகத்தில் காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கலாகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரவைத்தலைவர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் குழுவின் முதல் கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கோ.ஐயப்பன், ராமச்சந்திரன், சிந்தனை செல்வன், வி.பி.நாகைமாலி, முனிரத்தினம், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் பங்கேற்றனர். நீர்வளத்துறை அமைச்சரும், பேரவை முன்னவருமான துரைமுருகன் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.   கூட்டத்திற்கு பின்னர், பேரவை தலைவர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒவ்வொறு துறைகளையும் மாற்றி முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறார். அந்த அடிப்படையில் சட்டமன்றப் பேரவையில் காகிதமில்லாத இ-பட்ஜெட்டை தாக்கல் செய்வது, அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்த சாத்தியக் கூறுகள் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன் தொடுதிரை வைப்பது, உறுப்பினர்களுக்கு டேப்லெட் மற்றும் கையடக்க கணினி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு அளித்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இ-பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் படிப்படியாக மற்ற தொழில்நுட்ப வசதிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். * இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பேரவை விதிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.* எம்எல்ஏக்களுக்கு டேப்லெட், கையடக்க கணினி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.* நவீன  தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை