தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரகளை தலைமை மருத்துவர் போலீசில் புகார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில்

குடியாத்தம், ஜூலை 12: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாடகைக்கு அழைத்து செல்வதில் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வருகிறது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் மாறன்பாபு குடியாத்தம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அதில், மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் அமர்ந்து அங்கு பணியில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் மருத்துவ பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பிற்காக போலீசாரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில், டிஎஸ்பி ரவிச்சந்திரன், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து