டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓபிஎஸ் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு: மீண்டும் சூடு பிடித்தது அதிமுக அரசியல் களம்

சென்னை: டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். அவர், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனால், அதிமுக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கடந்த 23ம் தேதி சென்னையில் பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே நடந்து முடிந்தது. இதையடுத்து அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச்சென்றனர். பொதுக்குழுவில் நடந்த விவகாரங்கள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் செய்யப்போகிறார். பிரதமர், உள்துறை அமைச்சரை  நேரில் சந்தித்து பேசப்போகிறார் என்று பலவிதமான யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். மறுநாள்  ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கூட்டணிக்கட்சித் தலைவர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது பிரதமரை சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அதன்பின்பு மீண்டும் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார். அதன்பின்பு மாலையில் ஓட்டலில் இருந்து, தனது மகன் ரவீந்திரநாத் வீட்டிற்கு சென்றார். அங்கு பாஜ கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வந்து, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கோரினார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும், ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவே சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னைக்கு திரும்பாமல், டெல்லியில் உள்ள ஓட்டலுக்கு சென்று தங்கிவிட்டார்.   பிரதமரை நேற்று சந்தித்துப்பேச முடியாவிட்டாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சிலரை சந்திக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் யாரையுமே சந்திக்க வில்லை. ஓட்டலிலேயே தங்கியிருந்தார். அதன்பின்பு, நேற்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை வந்தார். அவருடன் ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் வந்திருந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் வரவேற்றனர். ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 8 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய திருச்சி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் மதுரை செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில் நேற்று இரவு முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பொதுக்குழு விவகாரம் குறித்தும், தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் குறித்தும் பேசுவதோடு, ஆதரவாக செயல்படும்படியும் கேட்டுக் கொண்டார். அவர் தொடர்ந்து முன்னாள் மாவட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்டு பேச திட்டமிட்டுள்ளார். தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் உள்ள மாஜி அமைச்சர்களால் பழிவாங்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகளையும் அவர் ஒன்று திரட்டவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக மூத்த தலைவர்களுடன் பேசி தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் மாஜிக்களை அவர் திரட்ட தொடங்கியுள்ளது, மோதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது வன்னியர் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால், தென் மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. இதனால் தேர்தலிலும் குறிப்பிட்ட சமூகம் அதிமுகவை புறக்கணித்தது. இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம், தனக்கு ஆதரவாக உள்ள தென் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், சுற்றுப் பயணம் செய்வது குறித்தும் முன்னணி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டுவதாக எடப்பாடி அணி அறிவித்துள்ளது. அவ்வாறு கூட்டினால் அதை சட்ட ரீதியாக தடுப்பது குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. நேற்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனால், அதிமுக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.11ம்தேதி பொதுக்குழு என்பது கனவு தான் ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது* புரியாமல் பேசுகிறார் சி.வி.சண்முகம்* மாஜி எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டுமுன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் சி.வி.சண்முகம், ‘பொதுக்குழுவில் அங்கீகாரம் கொடுக்காததால் அவர்கள் பதவி காலாவாதியாகிவிட்டது’ என்று கூறுகிறார்.  43வது விதியை பற்றி அவரே சொல்லுகிறார். 3 திருத்தங்களையும் சொல்கிறார். அது தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரையும் நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரம் கிடையாது. அவர் சொன்னது ஒரு கூத்து. இப்போது அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்திருக்கிறார்களே, அப்படி என்றால் இருவரது பதவிகளும் காலாவதியாகிவிட்டால் எப்படி இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மகன் உசேன் பெயரை எப்படி முன்மொழிய முடியும். அதனால் அவரை தேர்வு செய்ததும் செல்லாது. மேலும் 11ம்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று சொல்லுகிறார். அதை அறிவிக்க அவருக்கு தகுதியும் கிடையாது. அதிகாரமும் கிடையாது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்தது கையெழுத்திட்டு புதிய தேதியை அறிவித்தால் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்சுடன் தான் இருக்கிறார்கள். கட்சியை காப்பாற்றிய அனைவரையும் இவர்கள் ஓரங்கட்டி விட்டார்கள். ஆட்சியை காப்பாற்றுவதற்கு மட்டும் ஓபிஎஸ் வேண்டும். முதல்வராக வருவதற்கு சசிகலா தேர்ந்தெடுத்த போது, அவரது காலில் விழுந்து ஊர்ந்து செல்வதை எல்லோரும் பார்த்தோம். அதற்கு சசிகலா வேண்டும்.எல்லோரையும் அழித்துவிட்டு, முதுகில் குத்திவிட்டு கட்சியை கையில் எடுத்துக் கொண்டு கம்பெனி போன்று நடத்துவதற்கு தயாராகிவிட்டார்கள். அது ஒரு நாளும் நடக்காது.  நிச்சயம் நாங்கள் இந்த கட்சியை வழிநடத்துவோம். 11ம் தேதி பொதுக்குழு என்பது அது கனவாகத் தான் இருக்கும். நனவாகாது. இந்த கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ஓபிஎஸ் விஸ்வரூம் எடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார்கள். அதிமுகவை கட்டி காப்பார். ஓபிஎஸ் இருக்கும் வரை இவர்களது ஜம்பம் பலிக்காது.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை