டிராக்டர் மீது கார் மோதி மணப்பெண்ணின் அண்ணன் உட்பட 4 பேர் பலி கீழ்பென்னாத்தூர் அருகே சோகம் தங்கையின் திருமணத்திற்கு சென்றபோது விபத்து

கீழ்பென்னாத்தூர், பிப்.23: கீழ்பென்னாத்தூர் அருகே நேற்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு சென்ற போது டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணமகளின் அண்ணன் உள்பட 4பேர் பரிதாபமாக பலியானார்கள். விழுப்புரம் மாவட்டம், அசோகபுரம் அடுத்த மாரியம்மன் கோயில் தெரு, கஸ்பாகரணை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(28). தனியார் பார்மஸியில் வேலை செய்து வந்தார். இவரது தங்கையின் திருமணம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கள்ளாடிக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ேநற்று திருமணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மணமக்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் பங்கேற்றனர். அதேபோல் பாண்டியனுடன் வேலை செய்யும் நண்பர்களான விழுப்புரம் மாவட்டம், கஸ்பாகராண பகுதியை சேர்ந்த அழகன்(37), வேலூர் மாவட்டம், கஸ்பாவை சேர்ந்த பிரகாஷ்(34), திருவள்ளூவர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி(40) ஆகியோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நேற்று அதிகாலை பாண்டியன், அழகன், பிரகாஷ், சிரஞ்சீவி ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று குளித்துவிட்டு திருமணத்திற்கு தயாராவதற்காக வந்துள்ளனர். மீண்டும் திருமண மண்டபத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி அருகே உள்ள புதூர் கிராமம் அருகே வந்தபோது முன்னால் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்புறத்தில் எதிர்பாராத விதத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டிராக்டரின் பின் சக்கரம் கழன்று தனியாக ஓடியது. காரில் பயணம் செய்த பாண்டியன், பிரகாஷ், சிரஞ்சீவி ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில் அழகன் படுகாயம் அடைந்தார். டிராக்டரை ஓட்டிசென்ற கீழ்பென்னாத்தூர் அடுத்த வல்லிவாகை கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (40) சிறுகாயத்துடன் உயிர் தப்பினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அழகனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியன், பிரகாஷ், சிரஞ்சீவி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகனும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது நடந்த விபத்தில் மணமகளின் அண்ணன் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்