டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம்

புதுக்கோட்டை, ஜூன் 27: டி.ஏ.பி. உரத்திற்குப் பதிலாக விலைகுறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ரவிச்சந்திரன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனை வருமாறு: சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து மற்றும் சல்பர், கால்சியம் போன்ற நுண்ணூட்ட உரங்கள் சிறிதளவு உள்ளன. சூப்பர் பாஸ்பேட் உரம் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டு எளிதில் கிடைக்கிறது. சூப்பர் பாஸ்பேட் உரத்தின் மூலம் பயிர்களுக்கு கால்சியம் மற்றும் சல்பர் சத்து கூடுதலாகக் கிடைக்கிறது. மேலும் நீரில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால் பயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய்வித்துப் பயிர்களுக்கு சல்பர் அதிகம் தேவைப்படுவதால் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணெய்ச்சத்துடன், எண்ணெய்ச்சத்துப் பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.

சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள பாஸ்பேட் எளிதில் கரையும் உரம் என்பதால் சூப்பர் பாஸ்பேட் எனப் பெயர் பெற்றுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பு, எண்ணெய்வித்துப் பயிர்களான தென்னை மற்றும் நிலக்கடலை, தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தேவைப்படும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை வாங்கிப் பயன் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வளர்ந்த தென்னை மரம் ஒன்றிற்கு யூரியா 1.2 கிலோகிராம், சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ கிராம், பொட்டாஷ் 2 கிலோ கிராம் என்றஅளவில் நேரடி உரங்களைப் பயன்படுத்துவதால் உரப் பயன்பாடு அதிகரிக்கிறது. மேலும், விவசாயிகள் சாகுபடிக்கு முன்னதாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ கிராம் மட்கிய தொழுஉரத்துடன் பரிந்துரைக்கப்பட்ட சூப்பர் பாஸ்பேட் உரத்தினைக் கலந்து 30 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை அடியுரமாக பயிர் சாகுபடிக்கு முன் இடுவதனால் மணிச்சத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது.

மேலும், பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும்தன்மையை பெறுகிறது. விவசாயிகள் பாஸ்போ பாக்டீரியா என்னும் உயிர் உரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தினை கரைத்து பயிர்களுக்கு வழங்கிடலாம். எனவே விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்குப் பதில் விலை குறைவான சூப்பர் பாஸ்பேட் உரத்தினைப் பயன்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை