டவுன் சிண்ட்ரோம் குழந்தைகள்… அப் செய்வது எப்படி?

நன்றி குங்குமம் தோழி முன்பெல்லாம் கரு உருவான ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியமுடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது. இவ்வாறான குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அது சார்ந்த குறைபாடு என பலவகை சிறப்பு குழந்தைகள் பற்றி அறிந்திருப்போம். அந்த வரிசையில் டவுன் சிண்ட்ரோம் எனும் மரபணு சார்ந்த வளர்ச்சி குறைபாட்டை பற்றி தெளிவாக இங்கு பார்ப்போம்.டவுன் சிண்ட்ரோம் என்பது..?ஆணின் 23 குரோமோசோம்களும் பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்துதான் ஒரு கருவை உண்டாக்குகின்றன. இவ்வாறு உருவாகும்போது 21-வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக வயிற்றில் வளரும் கருவிற்கு டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சியின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாய் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வெளித் தோற்றத்தில் குறைபாடுகள் ஏற்படும். இதுவே டவுன் சிண்ட்ரோம்.அறிய வேண்டிய புள்ளி விவரங்கள்…*உலகளவில் டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது.*சுமார் ஆறு மில்லியன் பேர் உலகளவில் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள்.யாருக்கு வரலாம்..?*சற்று தாமதமான வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் (அதாவது 35 வயதிற்கு மேல்) குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.*அதேபோல் 35 முதல் 40 வயதுடைய ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோல் நிகழ வாய்ப்பு உள்ளது.*ஆனால் குறைபாடு உள்ள கருவின் தாய், தந்தை 90 சதவிகிதம் எந்தவித மரபணு குறைபாடும் இல்லாமல் இருப்பார்கள்.இவர்களின் குணாதிசயங்கள்…*இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள்.*குறைபாட்டிற்கு ஆளான குழந்தைகளில் சிலர் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.*அதேசமயம் இதன் தாக்கத்திற்கு ஆளான குழந்தைகளில் சிலர் அதிக கோபம் கொள்வார்கள். யாரிடமும் முகம் கொடுத்து பழக மாட்டார்கள்.*சில குழந்தைகள் மந்த நிலையிலேயே எப்போதும் இருப்பார்கள்.இவர்களின் தோற்றம் மற்றும் அறிகுறிகள்…*பல்வரிசை ஒழுங்கில்லாமல் அமைந்திருக்கும்.*உயரம் ஐந்தடிக்கு அதிகமாக இருக்கமாட்டார்கள்.*கண்கள் சற்று பெரியதாக இருக்கும் அல்லது மாறு கண் போன்ற அமைப்போடு இருக்கும். முன்நெற்றி வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்படும்.*தாடையின் அளவு சிறியதாக இருக்கும்.*முகம் சற்று தட்டையாக இருக்கும்.*நாக்கு மற்றும் விரல்கள் பெரியதாகவும், தட்டையாகவும் இருக்கும்.என்னென்ன உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்..?*நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.*தாமதமாக உட்காருவது, நடப்பது போன்ற வளர்ச்சிப் பாதை குறைபாடுகள் இருக்கலாம்.*மூளையின் செயல்திறன் (ஐக்யூ) அளவு குறைவாக இருக்கலாம்.*உடல் தசைகள் பலவீனமாய் இருக்கும்.*தைராய்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.*இதய நோய், குடல் நோய், உடற்பருமன் போன்ற காரணங்களால் இளம் வயதில் இறக்க நேரிடும்.ஐக்யூ அளவு…*ஒரு சராசரி மனிதனுக்கு 70 முதல் 130 என்ற அளவுகோலில் ஐக்யூ லெவல் இருக்கும். டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்யூ லெவல் ஆனது 50 முதல் 70 வரை இருக்கும்.*குறைபாடு தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு 50 என்ற அளவிலேயே இருக்கும். இந்த வகை குழந்தைகளுக்கு எட்டு வயது குழந்தைக்குரிய அறிவுதான் இருக்கும். அதேபோல் இந்நிலையை இந்த வகை குழந்தைகள் ஆயுள் முழுதும் சந்திக்க நேரிடும்.*குறைபாடு தாக்கம் சற்று குறைவாக உள்ள குழந்தைகளுக்கு 70 என்ற ரீதியில் ஐக்யூ லெவல் இருக்கும். இவர்கள் சராசரியான குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள்.எப்படி கண்டறிவது..?*கரு உண்டான பெண்ணின் ரத்த மாதிரியை எடுத்தும் அல்லது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமும் இந்த குறைபாடு இருக்கிறதா என்பதை அறியலாம்.*இந்த இரண்டு சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா என்பதை அறியலாம்.*இதில் திருப்தி ஏற்படாவிட்டால் அடுத்ததாக கருவின் நஞ்சு குழாயில் இருந்து திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்த சோதனைக்கு குறைந்தது பத்தாயிரம் வரை செலவாகும்.குணப்படுத்துவது சாத்தியமா..?*இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது.*ஆனால் கர்ப்பத்திலேயே கருவில் உள்ள குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா என்பதனை அறிய முடியும்.*அதேபோல் மருத்துவம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் சார்ந்து இயங்கும் பல்வேறு அமைப்புகள் உதவியுடன் இந்த குழந்தைகளை முறையாக பயிற்சி கொடுத்து, தொடர்ந்து செயலில் ஈடுபட செய்தால் இவர்களாலும் மற்றவர்களைப் போல ஓரளவு இயங்க முடியும்.நம்பிக்கை வழி நடப்போம்…

*மற்றவர்களைப் போல இவர்களுக்குள்ளும் பல்வேறு வகையான திறமைகள் புதைந்து இருக்கும். தகுந்த நேரத்தில் பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டுவர முடியும்.

*டவுன் சிண்ட்ரோம் என்பது நோயல்ல, இது ஒரு மனநலிவு குரோமோசோம் குறைபாடு என்பதனை மனத்தில் பெற்றோர்கள் பதித்துக் கொள்ள வேண்டும்.சிகிச்சை முறைகள்…இந்த குறைபாட்டை குணப்படுத்த முடியாது. எனினும் சில சிகிச்சை முறைகள் மூலம் இதனால் விளையும் அறிகுறிகளையும், சிக்கல்களையும் சரி செய்யலாம்.*இயன்முறை மருத்துவம் மூலம் தசை பலத்தை அதிகரிக்க முடியும்.*மேலும் தாமதமான வளர்ச்சி இருந்தால் அதனை பிரத்யேகப் பயிற்சிகள் மூலம் மீண்டும் கொண்டு வருவார்கள்.*கவனக் குறைவிற்கு, பேசுவதற்கு பயிற்சி போன்ற வேறு சில பயிற்சிகள் மூலம் மற்ற குறைபாடுகளை அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்கள் சீர் செய்வர். இதனால் மற்ற குழந்தைகளைப் போல் இவர்களும் பள்ளி செல்வதற்கும், வாழ்வில் இயங்கவும் முடியும்.டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பலர் இன்று அனைவரையும் போல் சாதித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நடனம், நடிப்புத் துறை, விமானப் பணிப்பெண் என பல துறைகளில் கால் ஊன்றி நிற்கின்றனர். எனவே இயன்முறை மருத்துவம் மற்றும் அதனுடன் வேறு சில பயிற்சிகள் சேர்த்து இந்த குழந்தைகளுக்கு வழங்கும்போது அவர்களை சரியான பாதை நோக்கி வழி நடத்த முடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் மனதில் பதியவேண்டியது அவசியமாகிறது.தொகுப்பு: அன்னம் அரசு படங்கள்: ஜி.சிவக்குமார்

Related posts

உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!

மனவெளிப் பயணம்

எலும்பியல் சிகிச்சையும் CT ஸ்கேன்களும் ஒரு பார்வை!