டயர் வெடித்து தடுப்பு கட்டையில் மோதிய பேருந்து 46 பயணிகள் உயிர் தப்பினர்

சிதம்பரம், ஜன. 9: சிதம்பரம் அருகே டயர் வெடித்து தடுப்பு கட்டையில் டிராவல்ஸ் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 46 பயணிகள் உயிர் தப்பினர். வேளாங்கண்ணியில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து 46 பயணிகளை ஏற்றிக்கொண்டு, பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை நாகப்பட்டினம் பாண்டியன் நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன்(46), என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துநராக வேலு(51) என்பவர் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை பேருந்து சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் பிரதான சாலையான வண்டிகேட் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன் பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி உடைந்து சேதமானது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டருக்கு லேசான காயம் ஏற்பட்டதோடு, பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் பயணிகளை மீட்டு மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்ததோடு பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு