ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரித்து சாதனை; கொளத்தூர் தம்பதி அசத்தல்

பெரம்பூர்: சுற்றுச்சூழல் நலன் கருதி கொளத்தூரை சேர்ந்த தம்பதி ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கும் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து அசத்தி வருகிறது. நாகரீக வளர்ச்சி, தட்பவெப்ப நிலை, விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்டவை காரணமாக பல்வேறு தொழில்கள் உருமாற்றம் அடைந்து அல்லது ஒட்டுமொத்தமாக அழிந்து புதிய ஒரு கண்டுபிடிப்பு உருவாகும். அதனை எவ்வாறு மனிதர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது அவர்களது அறிவையும், தன்னம்பிக்கையும் வைத்து அமையும். சில நேரங்களில் சிலர் செய்யும் தொழில் ஒட்டுமொத்தமாக மூடும் நிலைக்கு தள்ளப்படும். அப்போது அவர்கள் நமது வாழ்க்கையே முடிந்து விட்டது, என்று எண்ணாமல் மாற்று வழியை யோசித்து, அதே தொழிலில் எவ்வாறு வெற்றியடைய வேண்டும் என்பதை சிந்தித்தால், ஒவ்வொருவரும் தங்களது தொழிலில் வெற்றியடைய முடியும் என்பதை நமக்கு கொளத்தூரை சேர்ந்த ஒரு தம்பதி நிரூபித்துள்ளனர். கொளத்தூர் வனசக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி தமயந்தி. பன்னீர்செல்வம் கடநத் 1984ம் ஆண்டு தண்டையார்பேட்டை பகுதியில் சொந்தமாக பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு 1989, 90களில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தது. 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற ஒரு உத்தரவை கொண்டுவந்தது. இதனால் பன்னீர்செல்வம் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னிடமுள்ள பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த நேரத்தில் அவருக்கு தெரிந்த நண்பர் மூலம் புனேவில் உள்ள ஒரு கம்பெனி மூலம் ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் தன்மை உடையது என்றும், அதனை நம் நாட்டு தொழில்நுட்பத்தில் எளிய முறையில் தயாரிக்க முடியும் என்பதையும் அறிந்து கொண்டார். பின்னர், மக்காச்சோளம் மூலம் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை ஜெர்மன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, அதற்கு தேவையான இயந்திர தொழில் நுட்பத்தையும் மாற்றியமைத்தார். ஏற்கனவே நம் நாட்டில் பயன்படுத்தப்படும் புளே பீலீம் எனப்படும் பிளாஸ்டிக் தயாரிக்கப்படும் இயந்திரத்தில் டை மற்றும் ஹீட்டர் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்து கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, ஏற்கனவே பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தில் மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக்கை தயார் செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தினார். இதையடுத்து, கிண்டியில் உள்ள சிப்செட் மற்றும் டெல்லியில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட இடங்களில்  முறையாக அனுமதி பெற்று 50க்கும் அதிகமான மைக்ரான் உள்ள பிளாஸ்டிக்கை தயார் செய்தார். அந்த பிளாஸ்டிக் குறைந்தபட்சம் 135 நாட்களில் இருந்து 150 நாட்களுக்குள் மக்கி விடும் தன்மை உடையது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான கேடுதலும் இல்லாமல் பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய அதே மூலப் பொருட்களை வைத்துக்கொண்டு மக்கும் பிளாஸ்டிக் பைகளை தயார் செய்து, தற்போது சூப்பர் மார்க்கெட் மருத்துவமனை வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தம்பதி விற்பனை செய்து வருகின்றனர். பழைய பிளாஸ்டிக் பைகளுக்கு செலவிடப்படும் தொகையை விட சற்று கூடுதலாக மக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இருந்த போதிலும் சுற்றுச்சூழல் நலன் கருதி தற்போது மக்கும் பிளாஸ்டிக்கை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பன்னீர்செல்வமும் தனது வியாபாரத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறார். இதுகுறித்து பன்னீர் செல்வம் கூறுகையில், ‘‘இந்த மக்கும் பிளாஸ்டிக் பைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு அடுத்த சந்ததியினருக்கு இந்த மண்ணை பத்திரமாக விட்டுச் செல்கிறோம் என்ற ஒரு நிம்மதி உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை போட்ட போது நமது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று இல்லாமல். மாற்றி யோசித்து அதற்கான வழிகளில் ஈடுபட்டு தமிழகத்திலேயே முதல் முதலில் ஜெர்மனி நாட்டிலிருந்து மக்கும் பிளாஸ்டிக் மூலக்கூறுகளை வரவழைத்து மக்கும் பிளாஸ்டிக்கை தயார் செய்த பெருமை எங்களுக்கு உண்டு. மக்கும் பிளாஸ்டிக்கை தேடி அலைய வேண்டியதில்லை. பல இடங்களிலும் தற்போது மக்கும் பிளாஸ்டிக் பைகள் வரத் தொடங்கியுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தலாம்,’’ என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை