ஜாதி, மதம், மொழியை வைத்து அரசியல் செய்கிறது தமிழகத்தில் ஒருபோதும் பாஜ கனவு பலிக்காது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

 

பெரம்பூர்: சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் வடக்கு பகுதி 34வது (அ) வட்ட திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கொடுங்கையூர் கட்டபொம்மன் சாலையில் நடைபெற்றது. வட்ட செயலாளர் கொடுங்கையூர் கார்த்தீபன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாநிதி, பகுதி செயலாளர் முருகன், மாமன்ற உறுப்பினர் ஷர்மிளா காந்தி முன்னிலை வகித்தனர்.

இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழக ஜாதி, மதம், மொழி பெயரால் மக்களை பிரித்து அரசியல் செய்ய ஒன்றிய அரசு பல வேலைகளை செய்து வருகிறது.

அது மற்ற மாநிலத்தில் எடுபடும். ஆனால், இங்கு செல்லுபடி ஆகாது. அவர்களின் கனவு தமிழகத்தில் ஒதுபோதும் பலிக்காது. பா.ஜ கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று அதிமுக சொன்ன போது, எங்களுக்கு ஆச்சரியம். எப்படி துணிச்சல் வந்தது எடப்பாடிக்கு என்று. ஆனால் சட்டமன்றத்துக்கு போன பிறகு தான் தெரிந்தது. ஒரு வார்த்தை கூட பா.ஜ பற்றி எதிர்த்து பேச மறுக்கிறார்கள் என்று.

மோடி கொண்டு வந்த நீட் தேர்வால், கிட்டத்தட்ட 25 மாணவர்களை இழந்திருக்கிறோம். அதைப்பற்றி அதிமுகவில் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால், பா.ஜ.,வில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று சொல்வார்கள். ஆகவே இதுபோன்று கபட நாடகங்களை அரங்கேற்றி, நம்மை தேடி வருவார்கள். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பகுதி துணை செயலாளர் லதா, மாவட்ட துணை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் ஜாவித் உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை