சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் நெல்லை மாநகராட்சி அதிரடி

நெல்லை, ஆக. 24: நெல்லை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத திரையரங்கம், குடியிருப்புகளுக்கு ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நெல்வேலி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக சுமார் ரூ.4.50 லட்சத்திற்கும் மேலாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத தச்சநல்லூர் மண்டலம் சந்திப்பு பகுதியில் இயங்கி வந்த பிரபல திரையரங்கிற்கு ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநகராட்சி பணியாளர்களால் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

பாளையங்கோட்டை மண்டலத்தில் மாநகராட்சிக்கு பல வருடங்களாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத 6வது வார்டு, 8வது வார்டில் தலா ஒரு குடியிருப்பிலும், நெல்லை மண்டலத்தில் 19வது வார்டு பங்களா தெரு, 20வது வார்டு நாராயணசாமி கோயில் தெரு ஆகிய பகுதிகளில் தலா ஒரு குடியிருப்பிலும், குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெல்லை மண்டலம் 15வது வார்டு முதல் 27 வரையிலான வார்டுகளில் 5 வணிக வளாகங்கள், 8 குடியிருப்புகள் என 13 இடங்களில் ஜப்தி நடவடிக்கை நோட்டீஸ் மாநகராட்சி பணியாளர்களால் ஒட்டப்பட்டது.

மண்டல உதவி ஆணையர்கள் தச்சநல்லூர் கிறிஸ்டி, நெல்லை வெங்கட்ராமன், பாளையங்கோட்டை காளிமுத்து ஆகியோர் அறிவுறுத்தின்படி உதவி வருவாய் அலுவலர்கள் சிவனையா, அந்தோணி மரியதாஸ், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் வடிவேல்முருகன், அருந்தவசு, ஷேக்முகம்மது இப்ராஹிம் மற்றும் வருவாய் உதவியாளர்கள் அடங்கிய குழுவினரால் ஜப்தி நோட்டீஸ், குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நோட்டீஸ் ஒட்டப்பட்ட 15 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு வரி செலுத்த தவறும் பட்சத்தில் முதல் நடவடிக்கையாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத பொது மக்கள், வணிக வளாக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரியினங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி போன்ற நடவடிக்கைகளை தவிர்த்திட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை