சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

சேலம், ஜூன் 13: சேலம் மாவட்டத்தில் நேற்று 2,398 பள்ளிகள் திறக்கப்பட்டன. இப்பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளை பொறுத்தளவில் 366 நடுநிலைப்பள்ளிகள், 136 உயர்நிலைப்பள்ளிகள், 159 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 123 அரசு உதவி பெறும் பள்ளிகள், 504 தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் காலை 8.30 மணிக்கு ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளிகளில், மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் புதிய வகுப்புகளுக்கு துள்ளி குதித்துச் சென்றனர். நண்பர்களை பார்த்து மகிழ்ந்தனர். காலை 9.10 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்கம் பாடப்பட்டது. தொடர்ந்து, அந்தந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றனர்.
முதல் நாளான நேற்று காலையில் புத்துணர்வு பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தினர். இதில், நன்னெறி பாடங்கள் எடுக்கப்பட்டது. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து புத்தகங்கள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் கிடைக்கச் செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் கோட்டை மகளிர் பள்ளிக்கு வந்த மாணவிகளை ஆசிரியைகள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். ஒவ்வொரு மாணவியும் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்திச் சென்றனர். சேலம் குகை மூங்கப்பாடி அரசு பெண்கள் பள்ளியில் சோட்டா பீம் வேடமணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகளுக்குஇனிப்பு வழங்கி வரவேற்றனர். இறைவணக்கத்திற்கு பின், புத்துணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதேபோல், இதர அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை வகுப்பறை வரை கொண்டுச் சென்று விட்டு வந்தனர். சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பையொட்டி, சேலம் மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை போக்குவரத்து அதிகளவு இருந்தது. பள்ளி பேருந்துகள், கார், ஆட்டோ, டூவீலர்களில் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். டூவீலர்களில் அதிகப்படியான மாணவர்களை பெற்றோர் அழைத்துச் சென்றதை காணமுடிந்தது. இதனால் திருச்சி மெயின்ரோடு, அம்மாபேட்டை மெயின்ரோடு, அஸ்தம்பட்டி மெயின்ரோடு, சாரதா கல்லூரிச்சாலை, சூரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் 8.30 மணி முதல் 9 மணி வரையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆங்காங்கே நின்றிருந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்து பாதிப்பை சீர்செய்து அனுப்பி வைத்தனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்