சேலத்தில் டீசல் திருடியதாக கூறி லாரி டிரைவர் மீது கொடூர தாக்குதல் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்: 3 பேர் அதிரடி கைது

சேலம்: சேலத்தில் டீசல் திருடியதாக கூறி லாரி டிரைவரை, கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை தாக்கிய 3 பேரை கைது செய்த போலீசார், லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். சேலத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று  பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அரை நிர்வாணமாக இருக்கும் வாலிபர் ஒருவரை, டியூப்பால் கொடூரமாக தாக்குவதுபோல் காட்சிகள் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, இந்த சம்பவம் சேலம் நெத்திமேடு பகுதியில் நடந்திருப்பது தெரியவந்தது. சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் பிரதாப்(28), லாரி டிரைவர். இவர் ஜெகதீஸ் என்பவரின் லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது 60 லிட்டர் டீசலை திருடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெகதீஸிடம் தனது சம்பள பணத்தை கேட்டு, கடந்த 4ம்தேதி பிரதாப் சென்றுள்ளார். அப்போது லாரியில் உள்ள டீசலை திருடியதாக கூறி, பிரதாப்பை ஜட்டியுடன் தரையில் அமர வைத்து, டியூப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த காட்சியை வீடியோ எடுக்கும் நபர்களும், அவரை எட்டி உதைத்தனர். இதில் படுகாயமடைந்த பிரதாப், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து தகவலறிந்து விசாரணை நடத்துவதற்காக அன்னதானப்பட்டி போலீசார் வருவதை தெரிந்து கொண்ட லாரி உரிமையாளர் உள்ளிட்டோர், பிரதாப்பிடம் சதாமானம்  பேசியுள்ளனர். பின்னர், அவரை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று, இருவரும் சமரசமாக செல்வதாக எழுதி கொடுத்து விட்டு சென்றனர். இந்நிலையில், லாரி டிரைவர் பிரதாப் தாக்கப்படும் வீடியோவை, தாக்கியவர்களில் ஒருவர் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ளார்.  அதில், அவர் கொடூரமாக தாக்கப்படும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலை தொட்டு மன்னிப்பு கேட்டும், விடாமல் அவரை டியூப்பால் அடித்து நொறுக்கியுள்ளனர். தலையில் எட்டி உதைப்பது, கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த அன்னதானப்பட்டி போலீசார், பிரதாப்பை தாக்கிய ஜெயப்பிரகாஷ், சீனிவாசன், ஹரிநாத் ஆகியோரை கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளர் ஜெகதீசை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை