சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்தால் கைது நடவடிக்கை: அதிகாரிகள் அதிரடி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகர மாநகராட்சி என்ற சிறப்புமிகு அந்தஸ்துடன் திகழ்ந்தாலும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை இன்றளவும் ஒரு சில பகுதிகளில் நீடிக்கிறது. சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க சுவர்களில் கடவுள் சித்திரங்களை வரையும் நிலைமை இருக்கிறது. சென்னையில், மாநகராட்சி சார்பில் இலவச கழிப்பிடங்கள், கட்டண கழிப்பிடங்கள், நவீன கழிப்பிடங்கள் (இ-டாய்லெட், ‘நம்ம’ டாய்லெட்) என 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன.வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது சென்னையில் சுமாராக ஒன்றே கால் கோடி பேர் வசிக்கின்றனர். பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.இவர்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 943 இடங்களில் 7590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இவை அனைத்தும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கழிப்பிடங்களை மாநகராட்சி பராமரித்து வருகிறது.ஆனால், பெரும்பாலான கழிப்பிடங்களில் காசு கொடுக்காமல் இலவச கழிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இவைகளை அப்பகுதியில் உள்ள அரசியல்வாதிகள், முக்கிய நபர்கள் சிலர் ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இவர்கள், பொதுக்கழிப்பிடங்களில் ரூ.5 முதல் ரூ.10 வரை பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முக்கிய பகுதிகளில் இதற்கும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. எனவே, சென்னை மாநகராட்சியின் இலவச கழிப்பிடங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடம் அவற்றை மீட்டு பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி அதுபோன்ற புகார் எழுந்துள்ள பகுதிகளில் இருக்கும் பொதுக்கழிப்பிடங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளது.அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது மட்டும் ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் யாரும் அங்கிருப்பதில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு தகவல்கள் பரிமாறப்படுகிறது என்கிறார்கள். இதனால் உயர் அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் அவர்கள் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் புகாராகவே இதை தெரிவித்தனர்.இதையடுத்து, அப்படிப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா உறுதி அளித்தார். அதே நேரம் இப்பிரச்னைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில், தற்போது பொதுக்கழிப்பிட ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று, ராயபுரம் மண்டலம் வார்டு-59க்குட்பட்ட பிராட்வே பேருந்து நிலைய வளாகம் மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் எதிரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்த 2 பேரை பிடித்து காவல் துறையில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பொதுக்கழிப்பிடங்களில் யாராவது கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.36 கோடி மதிப்பில் 366 இடங்களில் சிதிலமஅடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்ட பணியின் கீழ் 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட உள்ளன. மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்படும் பொது கழிப்பிடங்களில் பொதுமக்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் பெறப்பட்டன. இந்நிலையில் மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் கட்டணமில்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது காவல் துறை மூலம் வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை