சென்னை மயிலாப்பூர் திருக்கோயிலை ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பழமையான திருக்கோயில்களில் அதன் தொன்மை மாறாமல், புதுப்பித்து திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்குகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (12.12.2022) பழமையான திருக்கோயில்களில் ஒன்றான மயிலாப்பூர், சித்திரக்குளம் அருள்மிகு ஆதி கேசவபெருமாள் திருக்கோயிலுக்குச் சென்று அங்குள்ள சன்னதிகள், பசு மடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை மடப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பேயாழ்வார் அவதரித்த திருத்தலமான ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் இறை தரிசனம் முடித்து, சுற்றுபுற சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை, மடப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டோம். 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இத்திருக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. இக்கோயிலின் சித்திரக்குளம்,  ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. இதை இந்து சமய அறநிலையத்துறை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த திருக்கோவிலுடைய திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது,  திருக்கோவிலுக்கு வரவேண்டிய வருமானங்கள் தடையின்றி கொண்டு வந்து சேர்ப்பது, ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களை சட்டரீதியாக மீட்கின்ற நடவடிக்கைகளை முழு வேகத்துடன் மேற்கொள்வது, இத்திருக்கோயிலை பொறுத்தளவில் பல்வேறு நிலையில்  நிலுவையில் இருக்கும் வழக்குகளில்  நீதிமன்றம் காட்டுகின்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை  துரிதப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம். இப்பணிகளுக்கு அறங்காவலர்களாக இருக்கின்ற சம்பத்குமார், ராமானுஜம் ஆகியோர் முழு ஒத்துழைப்பை நல்குவதாக தெரிவித்து இருக்கின்றார்கள்.முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தினுடைய ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை வழங்கினார்கள்.  இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை அரசின் சார்பில் இதுவரையில் எந்த ஆட்சியும் வழங்கவில்லை. சுவாமி தரிசனம் செய்ய வருகின்ற பக்த கோடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவது, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்பது, திருக்கோவிலுக்கு வரவேண்டிய வருவாயை முறையாக கொண்டு வந்து சேர்ப்பது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள், கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்துதல் என்று பல்வேறு கோணங்களில் இந்த துறைக்கு நல்ல பல அறிவுரைகளை வழங்கி வரும், முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக் காலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பொற்காலம் என்றே கூறலாம்.நேற்றைய தினம் மதுரை அழகர்கோயில் அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகமெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில் இதுவரையில் 394 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்ற திருக்கோயில்களுக்கு திருவிழா காலங்களில் தேவையான முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து  மேற்கொண்டு எந்த  அசம்பாவிதமும் ஏற்படாமல் நடக்கின்ற வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு சான்றாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா மற்றும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவும் சான்றாகும். இந்த திருக்கோயிலைப் பொறுத்தளவில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு  அறங்காவலர்களாக இருக்கின்ற சம்பத்குமார் அவர்களும் ராமானுஜம் அவர்களும் மனதார முழுமையாக துறைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்து இருக்கின்றனர். ஆகவே திருப்பணிகள் மேற்கொள்வதில் தடை கற்கள் எது இருந்தாலும் அதை தகர்த்தெறிகின்ற வல்லமை இந்த ஆட்சிக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் உண்டு என்ற வகையில்  இந்த திருக்கோவிலில் திருப்பணிகளை விரைவாக மேற்கொள்வோம்.மாண்டஸ் புயல் காரணமாக பாரிமுனை ஒரு திருக்கோயிலில் கொடிமரமும்,  காரணீஸ்வரர் திருக்கோயிலில் திருக்குளத்தில் மரமும் சாய்ந்துள்ளது. அவை சீர் செய்யப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணியில் விழுந்த ஒரு கோயிலின் கலசம் பத்தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குண்டான பரிகாரங்களை செய்து கோபுரத்தில் கலசம்  பொறுத்தப்படும். இது சம்பந்தமாக துறையின் ஆணையர் அவர்கள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்தோடு, மேலும், புயலால் சேதமடைந்த திருக்கோயில்களில் அவற்றை உடனடியாக சரி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் அவர்கள் கண்ணகி கோயில் தொடர்பாக கேரளா மாநில அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கின்றார். அதேபோல் நம்முடைய மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியான தேனி மார்க்கமாக பக்தர்கள் கண்ணகி கோயில் செல்வதற்கான பாதையை செப்பனிடுகின்ற பணியையும் மேற்கொள்ள இருக்கின்றோம். அதற்குண்டான கருத்துரு பெற்றபின்  முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய அறிவுரைகள் பெற்று செயல்படுத்தப்படும். திருக்கோயில்களில் ஆண்டவன் முன் அனைவரும் சமம். திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கை கோட்பாடுகள், லட்சியங்கள் அதுதான். எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் திருக்கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்று அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தேனி மாவட்டம்,  பெரியகுளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் விசேஷமாக தனிப்பட்ட நபருக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாக வரும் செய்தி குறித்து  திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் அவர்களிடம் அறிக்கை கேட்டு இருக்கின்றோம். அந்த அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள்  துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மீட்கப்பட்டுள்ள சிலைகளை அடையாளம் கண்டு அந்தந்த திருக்கோவிலுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதற்குண்டான பணிகளை வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, துணை ஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர்கள் எம். பாஸ்கரன், ராஜா, அறங்காவலர்கள் சம்பத்குமார், ராமானுஜம்  மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு