சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.434 கோடியில் புதிய திட்டங்கள்: உலக வங்கி குழுவினர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் 2030ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய  ரூ.434 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உலக வங்கி குழுவினர் நேரில்  ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மாநகரில் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் வகையில் ‘சென்னை பார்டனர் ஷிப் புரோகிராம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம்  உலக வங்கி நிதியுதவியுடன் 2030ம் ஆண்டின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு நீர்வளத்துறை, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை, மாநகராட்சி  உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் சென்னை மாநகரின் கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம்,  சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. குடிநீர் மற்றும் வடிகால்கள் வசதி செய்து தரப்படுகிறது. அதன்படி நீர்வளத்துறைக்கு ரூ.434 கோடியும், குடிநீர் வாரியத்துக்கு ரூ.600 கோடியும்  ஒதுக்க முன்வந்துள்ளது. நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்படவுள்ள ரூ.434 கோடியில் சென்னை மாநகரின் குடிநீர் வசதிக்காக 15 ஏரிகள், 7 இடங்களில் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. அதேபோல், ரூ.600 கோடியில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து ஏரி நீரை குடிநீராக மாற்றுவதற்காக புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பணிகளை ஆய்வு செய்ய உலக வங்கி குழுவினர் நேற்று முன்தினம் தமிழகம் வந்துள்ளனர். நீர்வளத்துறை சார்பில்  மழைநீரை சேமித்து வைக்கும் புதிய திட்டத்துக்காக செயல்படுத்தப்பட உள்ள ஏரிகளை இந்த குழுவினர் நேரில் ஆய்வு செய்கின்றனர். மேலும், தடுப்பணை அமைய உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பூண்டி ஏரியை ஆய்வு செய்தனர். இந்த ஏரி தற்போது 3231 மில்லியன் கன அடி உள்ள நிலையில், அதன் கொள்ளளவை 2 டிஎம்சியாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு நடத்தினர். 2 நாட்கள் இக்குழுவினர் ஆய்வை முடித்து விட்டு அந்தந்த துறைகளை சேர்ந்த செயலாளர்களை சந்திக்கின்றனர். பின்னர், தலைமை செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அவர்களிடம், திட்ட பணிகளின் மூலம் சேமித்து வைக்கப்படும் நீர், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியுமா என்பது குறித்து விரிவாக உலக வங்கி குழுவினர் விளக்கம் அளிக்கின்றனர், என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு