சென்னை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் ராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் அமைந்துள்ளது. மொத்தம் 8 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விரைவு நீதிமன்றங்கள், ஆதி திராவிடர் நல அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் என பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு துறை ரீதியாகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கு மக்கள் யாரும் வருவதில்லை. மேற்கண்ட அலுவலகங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் தினசரி பணிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் போன் செய்த மர்ம நபர், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக  கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.  அவர், செல்போனில் இருந்து பேசியதால்  காவல்துறையினர் அந்த எண்ணிற்கு மீண்டும்  தொடர்பு கொண்டனர். ஆனால், தொடர்பு கிடைக்கவில்லை. இதனிடையே, கலெக்டர் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பதை போலீசார் சோதனை செய்தனர். ஆனால், அங்கு எதுவும் சிக்கவில்லை. இதுதையடுத்து அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் குமார் என்ற மனநிலை சரியில்லாதவர், இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவரது சகோதரி சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு போன் செய்து விளக்கமளித்தார். தனது போனை தம்பி எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டதாகவும் அவர் இது போன்று பல முக்கிய பிரபலங்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லுவார். அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம், என கூறினார். இதையடுத்து போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவர், நேற்று முன்தினம் திரைப்பட நடிகர் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கூறினார். போலீசாரும் அங்கு சோதனையிட்டனர் ஆனால் அதுவும் சிக்கவில்லை. செல்போன் இவர் கைக்கு கிடைத்தால் பல முக்கிய பிரபலங்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்புவது இவரது வாடிக்கை என்று  கூறப்படுகிறது….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்