சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்..!!

சென்னை: சென்னையில் தபால் வாக்குக்காக பதிவு செய்த 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் நடைமுறை தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று தேர்தலுக்கான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து ஓட்டுப்போட முடியாத சூழலில், அவர்களின் வீடுகளிலேயே இருந்தவாறு ஓட்டு போடும் முறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் 7,300 பேர் தபால் வாக்குக்காக பதிவு செய்துள்ளனர். ஒரு குழுவுக்கு 5 பேர் வீதம், 70 குழுக்கள் தபால் வாக்குகளை பெறுகின்றன. இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. தபால் வாக்குகள் பெறும் நடைமுறை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. தபால் வாக்குக்காக பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி மூலமாக முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டு அவர் வீட்டிற்கே நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கப்படுகிறது. தபால் வாக்குக்காக பதிவு செய்தவர்களுக்கு இருமுறை அவகாசம் வழங்கப்படுகிறது. இரு அவகாசத்தையும் தவறவிட்டவர்கள் தேர்தல் நாளன்று நேரில் சென்று வாக்களிக்கலாம். ஒரு குழு தினசரி 15 வாக்குகளை அந்தந்த வீடுகளில் சென்று பதிவு செய்யும். தபால் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களின் குழு, சம்பந்தப்பட்ட தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளரின் முகவரிக்கு வருகை தரும் தேதி மற்றும் நேரம், அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். செல்போன் இல்லாத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். தபால் வாக்கு அளிப்போர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பது மறைமுகமாக பாதுகாக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்