செஞ்சியில் துணிகரம் காசி விஸ்வநாதர் கோயில், 2 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை

செஞ்சி, ஜூலை 26: செஞ்சி பெரியகரம் பகுதியில் காசி விஸ்வநாதர் கோயிலை நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம் போல் கோயில் நிர்வாகி சண்முகம் கோயிலுக்கு வந்து பார்த்த போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மாயமாகி இருந்தது. மேலும், விஸ்வநாதர் கழுத்தில் இருந்த தங்க பொட்டும் திருடு போயிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த 7 மாதமாக கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததால் உண்டியல் திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் உண்டியலில் அதிகளவு பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் இளங்கோவன் (32). இவர் கடந்த 22ம் தேதி குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று நேற்று முன்தினம் காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

இதேபோன்று அதே பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை மகன் வினோத் (30). இவரது சொந்த ஊர் மேல் ஒலக்கூர். இவர் ஒலக்கூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. 2 வீடுகளிலும் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளங்கோவன், வினோத் ஆகிய 2 பேரும் செஞ்சி போலீசில் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை