செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை தீப்பிடித்து எரிந்தது: ரூ. 30 லட்சம் மதுபானம் நாசம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய மேம்பாலம் அருகே இன்று அதிகாலை ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் ₹30 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் எரிந்து நாசமாகிவிட்டன. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   தமிழகத்தில் நாளை (19ம் தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முதல் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் 3 நாட்களுக்கு மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய மேம்பாலம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சூபர்வைசர்கள் ஆறுமுகம், நட்ராஜ், சேல்ஸ்மேன்கள் தணிகையரசு, சங்கர், பாலாஜி ஆகியோர் வேலை செய்கின்றனர். முன்னதாக, கடந்த 16ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து, கடையை மூடிவிட்டு சூபர்வைசர்கள் மற்றும் ஊழியர்கள் வீடு திரும்பினர்.இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதல் இந்த டாஸ்மாக் கடைக்குள் திடீரென மதுபாட்டில்களில் தீப்பிடித்து கரும்புகை வெளிவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் மற்றும் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் கடை முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மதுபாட்டில்களில் பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.   எனினும், கடைக்குள் இருந்த ₹30 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகை மதுபான பாட்டில்கள் வெடித்து சிதறி நாசமாகிவிட்டன. இப்புகாரின்பேரில் செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடை 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் மர்ம நபர்கள் யாரேனும் கடையை உடைத்து மதுபாட்டில்களை உடைத்து தீ வைத்தனரா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது….

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்