சுவர் விளம்பரம் எழுதியதில் கோஷ்டி மோதல் முன்னாள் அமைச்சர் பெயரை அழித்து அதிமுகவினர் ரகளை: இரு தரப்பினரும் போலீசில் புகார்

சென்னை:  அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்து கோஷ்டி மோதல் அதிகரித்து, ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் வடசென்னை  வடகிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் சிபாரிசில் சிலரும், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆதரவாளர்கள் சிலரும் பதவிகளை பெற்றனர்.பல்வேறு நிகழ்வுகளால் மாவட்ட செயலாளருக்கும், முன்னாள் அமைச்சருக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாகவே இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் எம்கேபி நகர் மேற்கு நிழற்சாலையில், பகுதி செயலாளர் ஜே.கே.ரமேஷ் உத்தரவின்பேரில் சுவர் விளம்பரம் எழுதினர். இதில் ஜெயக்குமார் பெயர் இடம்பெற்றிருந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெயர் இடம்பெறவில்லை. ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளரின் ஆதரவாளரான லைன் குமார் உள்ளிட்ட அதிமுகவினர் சுவர் விளம்பரத்தை பெயின்ட் மூலம் அழித்ததாக கூறப்படுகிறது.  குறிப்பாக ஜெயக்குமார், பகுதி செயலாளர்  பெயர் உள்ளிட்டவற்றை அழித்தனர். தகவலறிந்து வந்த எதிர் தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த எம்கேபி நகர் போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு வெளியே ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்ட சம்பவமும் அரங்கேறியது. ஒரே கட்சியைச் சேர்ந்த இரு அணியினரும் சுவர் விளம்பரத்திற்காக  சண்டை போட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கட்சியில் பலம் வாய்ந்த நபராக தன்னை காட்டிக்கொள்ளும் முன்னாள் அமைச்சரின் பெயரை வட்ட செயலாளர் அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்