சீனாவில் 1.7 கோடி மக்கள் வெளியேற தடை: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பரிசோதனைகள் தீவிரம்

பீஜிங்: சீனாவின் அண்டை நாடான ஹாங்காங், தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ளதால் சீனாவில் 1.7 கோடி மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு அதிகரிப்பால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டாக ஆட்டிப் படைத்தது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசிகள்  கட்டாயம் போன்ற நடைமுறைகளால் ஓரளவு தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மிகவும் வேகமாக பரவக்கூடிய உருமாறிய ஒமிக்ரான் மற்றும் அறிகுறியற்ற வைரஸ் தொற்றுகளால் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்குமா? என்ற அச்சம்  நிலவி வருகிறது. சீனாவின் அண்டை நாடான ஹாங்காங்கில் ஒமிக்ரான் தொற்று  வேகமாக பரவி வருகிறது. தெற்கு தொழில்நுட்ப நகரான  ஷென்சென் பகுதியில் ஒமிக்ரான் வேகமெடுத்துள்ளதால் சமூக பரவலை கட்டுப்படுத்த வரும் 20ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஷென்சென் சுகாதார அதிகாரி லின் ஹான்செங் தெரிவித்தார். சீனாவின் வடகிழக்கு பகுதியான ஜிலினில் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. வடகொரியா எல்லையில்  கிட்டத்தட்ட 7,00,000 பேர் மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற பகுதியான யாஞ்சியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மக்கள் வீட்டிலிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு அண்டை நகரமான சாங்சுனில் வசிக்கும் 90  லட்சம் மக்களும் கடந்த 1ம் தேதி முதல் முழு ஊரடங்கில் வீட்டில் முடங்கி  உள்ளனர். சீனாவின் அண்டை நாடுகளில் மீண்டும் தொற்று வேகமாக பரவி வருவதால் சீனாவில் தினசரி தொற்று பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3,400 பேருக்கு தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது சீனாவில் 18 மாகாணங்களில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ்கள்  வேகமாக பரவி வருவதால் தினசரி தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து  வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை சேர்ந்த 1.70 கோடி பேரை வீட்டிலேயே இருக்க சீனா அறிவுறுத்தி உள்ளது. மேலும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் பள்ளிகளை மூடவும், வடகிழக்கு நகரங்களில் ஊரடங்கை அமல்படுத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சமூக பரவலை கட்டுப்படுத்த நியூக்லிக் அமில சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மற்ற நாடுகள் அச்சமடைந்துள்ளன. மீண்டும் கொரோனா பரவல், பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பெரும் பொருளாதார இழப்புகளை சந்திக்க வேண்டிவரும் என்று உலக நாடுகள் கவலையடைந்துள்ளன….

Related posts

பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது

தமிழ்நாட்டில் ரூ.850 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.!!

இந்திய முதலீட்டு அலுவலகம் சிங்கப்பூரில் திறப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு; இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தம்