Sunday, October 6, 2024
Home » சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி 1980, 1995, 2017 என வெவ்வேறு காலகட்டங்களில் சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி என்ற மூன்று பெண்களுக்கு, குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படும் ஒடுக்குமுறையை மூன்று குறுங்கதைகளாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் கூறுகிறது. இந்த வெவ்வேறு காலகட்டங்களில், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாறியிருந்தாலும், அவள் ஒடுக்கப்படுவது மட்டும் மாறவே இல்லை என்பதை இப்படம் பதிவு செய்துள்ளது. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஜெயமோகன், ஆதவன் ஆகியோரின் சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பல விருது விழாக்களுக்கு பயணித்து, தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.1980 – முதல் கதைசரஸ்வதியாக, காளீஸ்வரி சீனிவாசன் நடித்துள்ளார். கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சரஸ்வதி தனது கணவன் மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வருகிறாள். வெளியே செல்லும் போது கணவன் விறு விறு என கைவீசி நடக்க, சரஸ்வதி ஒரு கையில் குழந்தை, மறுகையில் பாத்திரப்பை, தோளில் ஒரு பை என நடக்கவே முடியாமல் பின் தொடர்கிறாள். சரஸ்வதியின் கணவனாக கருணாகரன் நடித்துள்ளார். குழந்தையை தொடக்கூட மறுக்கும் கணவன், குழந்தை அழும் போது மட்டும், ‘‘சமாதானம் பண்ணக் கூட தெரியாதா, நீ எல்லாம் என்ன அம்மா?” எனக் கேட்கிறான். சரஸ்வதி கணவனின் வசைக்கும் அடிக்கும் பயந்தே வாழ்கிறாள். அவர்கள் வசிக்கும் சிறிய வீட்டில் ஒரே ஒரு நாற்காலி இருக்கிறது. அது வீட்டின் ஆண் உட்கார மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கணவன் வேலைக்குச் சென்றாலும், அதில் மனைவி உட்காருவதில்லை. சிறிய பிரச்சனைக்கு கூட அடிக்கும் கணவனை நேருக்கு நேராக பார்த்து ‘அடிக்காதீங்க’ என திடமாக கூறுகிறாள் சரஸ்வதி. அந்த ஒரு வார்த்தை  அவளின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. காளீஸ்வரி சீனிவாசனின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அதிக வசனம் இல்லாமல் வெறும் உடல் மொழியிலும் பார்வையாலும் மட்டுமே உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்திவிடுகிறார். கடைசியில் தன் கணவனின் இருக்கையில் அமர்ந்து டீ அருந்தும் சரஸ்வதி தன்னம்பிக்கை பெண்ணாக மிளிர்கிறாள். ஆணாதிக்க சமூகத்தில் அவமானமாகவும், ஒரு பெண்ணுக்கு நிகழும் மிகப்பெரும் துயரமாகவும் பாவிக்கப்படும் முடிவு, சரஸ்வதிக்கு வரமாகவே அமைகிறது. 1995 – இரண்டாவது கதைபார்வதி திருவோத்து தேவகியாக நடித்திருக்கும் கதை இது. சிறுவன் ராமுவின் பார்வையில் கதை நகர்கிறது. தனது சித்தப்பாவின் மனைவியாக வரும் தேவகி சித்தி, வேலைக்குச் செல்வதில் தொடங்கி அவள் ஸ்கூட்டி ஓட்டுவது வரை ராமு ரசிக்கிறான். அந்த நடுத்தர கூட்டுக் குடும்பத்திற்கு, அரசாங்க வேலையிலிருக்கும் மருமகளாக தேவகி வருகிறாள். தேவகியும் அவளது கணவனும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். தேவகி ஸ்கூட்டி ஓட்ட, அவளது கணவன் பின் இருக்கையில் அமர்ந்து அலுவலகம் செல்கின்றனர். தேவகி கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தாலும், தனது கணவனை பெயர் சொல்லி அழைக்கும் சுதந்திரம் அவளுக்கு இருக்கிறது. ஆனால், அவளது ஒவ்வொரு செயலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவ்வீட்டின் மூத்த மருமகளுக்கு தேவகியின் சுதந்திரம் சங்கடத்தை கொடுக்கிறது. தேவகி ரகசியமாய் ஒரு டைரி எழுதுவது தெரிந்ததும் வீடே பரபரப்பாகிறது. ஒரு பெண், கணவனுக்கு கூட தெரியாமல் ஏன் டைரி எழுத வேண்டும் என ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு தேவகியின் ஒரே பதில், ‘அது என் டைரி, என் பர்சனல்’ என்பது மட்டுமே. அன்பான கணவனும் ஒரு கட்டத்தில் குடும்பத்தினரின் ஆணாதிக்கத்திற்கு அடிபணிந்து மனைவியை எதிர்க்கிறான். ஒரு பெண்ணுக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் கூட கணவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என இந்த சமூகம் நினைப்பது எவ்வளவு அபத்தமானது. இந்த கதையில் பெண் சுதந்திரமாக வேலைக்குச் செல்கிறாள், அவளுக்கு அன்பான கணவனும் இருக்கிறான். இந்தளவுக்கு முன்னேறியிருந்தாலும், அவளை ஒரு தனி மனுஷியாக அவளது குடும்பம் பார்க்க மறுக்கிறது. அவள் அப்போதும் யாரோ ஒருவரின் மகளாக, மனைவியாக, மருமகளாக மட்டுமே இருக்கிறாள்.    2007-2017 – மூன்றாவது கதை லட்சுமி ப்ரியா சந்திரமெளலி, சிவரஞ்சனியாக நடித்துள்ள இப்படம் சுமார் 40 நிமிடங்களுக்கு நீள்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் நடக்கும் இக்கதையில் முதல் இரண்டு கதைகளைவிட பெண்களுக்கு அதிக வாய்ப்புகளும் சுதந்திரமும் இருக்கும் என நம் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே மிஞ்சுகிறது. காலத்திற்கேற்ப ஒடுக்குமுறையின் வடிவமும் மாறிவருகிறது என்பதையே இக்கதை கூறுகிறது. கல்லூரி இரண்டாம் ஆண்டில் படிக்கும் சிவரஞ்சனி, ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வெல்கிறாள். தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் பெறுகிறாள். ஆனால் இதற்கிடையே அவளுக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதற்கான எந்த எதிர்ப்புகளையும் சிவரஞ்சனி தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனால் அதில் பெரிய ஆர்வமும் அவளுக்கு இல்லை. பொதுவாக கல்லூரி பெண்களிடம் திருமணத்திற்கு பின்னும் நீ படிக்கலாம், வேலைக்கு போகலாம் என கூறப்படுவது போல அவளிடமும் கூறியிருக்கலாம். திருமணமானதுமே சிவரஞ்சனி கர்ப்பம் தரிக்கிறாள். கல்லூரியில் இருக்கும் மற்ற மாணவிகளிடமிருந்து அன்னியமாகிறாள். கர்ப்பமானதால் தேசிய போட்டியில் பங்குபெறும்  வாய்ப்பையும் இழக்கிறாள். அப்படியே கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தால், சிவரஞ்சனிக்கு பத்து வயதில் ஒரு மகள். காலையில் முதல் ஆளாக எழுந்து பால் வாங்கி வருவதில் தொடங்கி கணவனுக்கு டவல், சாக்ஸ் என அனைத்து பணிவிடைகளையும் செய்கிறாள். தி க்ரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் சாயலில் கிச்சனுக்கும் ஹாலுக்குமாக  அந்த சிறிய அப்பார்ட்மெண்ட் வீட்டில் மூச்சி வாங்கி ஓடி வேலை செய்கிறாள் சிவரஞ்சனி. இங்கு உண்மையிலேயே குழந்தை கணவனா இல்லை மகளா என்ற சந்தேகம் வருமளவு கணவனின் ஒவ்வொரு தேவையையும் சிவரஞ்சனி முகம் சுளிக்காமல் செய்து கொடுக்கிறாள். ஓர் ஆணால், தனது பத்து வயது குழந்தை செய்யும் வேலைகளைக் கூட செய்ய முடியாதா என்ற கேள்விதான் எழுகிறது. தனது பத்து வயது பேத்திக்கு அறிவுரைக் கூறும் பாட்டி, தனது மகனுக்கு அந்த  அறிவுரைகளைக் கூற தவறியிருப்பதன் விளைவுதான் இது. கணவனோ தன் அம்மா, மனைவி, மகள் என வீட்டிலிருக்கும் மூன்று பெண்களையும் அதட்டுகிறார். இதில் நண்பர்களாக வரும் மேத்யூ, சத்தியவதி கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம், பெண் படித்து வேலைக்குச் சென்றாலும் தன் கணவனுக்கு அடிபணிந்தே வாழ்கிறாள் எனத் தெரிகிறது. ஆனால் அதைப் புரிந்துகொண்டு எதிர்த்து கேள்வி கேட்கும் நிலையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கின்றனர். இல்லத்தரசியான சிவரஞ்சனியோ தன் கணவனின் ஒவ்வொரு சொல்லையும் கேட்டே நடக்கிறாள். எப்படி தன் பிறந்த வீட்டில் அவளுக்கு குரல் இல்லையோ, அதேப் போல புகுந்த வீட்டிலும் அவளுக்கு குரலில்லை. நேரடியாக சிவரஞ்சனி மீது வன்முறை நிகழாவிட்டாலும், சரஸ்வதியின் முடிவு சிவரஞ்சனியின் வாழ்க்கையைவிட மேலானதாக தோன்றுகிறது. மூன்று கதைகளிலுமே பெண்கள் தொடர்ந்து தங்கள் குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்தினரின் சின்னச் சின்ன தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். பொருளாதாரம், படிப்பு, வேலை என பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைத்தாலும், பெண்களின் வாழ்க்கை மட்டும் ஒரு ஆணைச் சார்ந்தே இருப்பதை இந்த திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இப்படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே “இது நமக்கு பழக்கம் இல்லாதது. இப்படி நம் குடும்பத்தில் யாருமே செய்ததில்லை” என ஒரு காரியத்தை ஏன் செய்கிறோம் எதற்கு தடுக்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல், இதை அப்போது முன்னோர்கள் பின்பற்றினார்கள். அதனால் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் மட்டுமே செயல்படுகின்றனர். காலத்திற்கேற்ப ஆண்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டாலும், பெண்கள் விஷயத்தில் மட்டும் அந்த கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இப்படத்தின் ஒரே மைனஸ், கதையின் விறுவிறுப்பு குறைந்து மெதுவாக நகர்வது.  தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi