சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு மூன்றரை ஆண்டு சிறை

விழுப்புரம், நவ. 23: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்திகுப்பத்தை சேர்ந்த பாவாடை(61). கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை தனியாக அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு அங்கிருந்து தப்பித்து வந்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாவாடையை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பாவாடைக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி