சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் மனு குடியாத்தம் அருகே உலாவந்த

குடியாத்தம், ஜூன் 25: குடியாத்தம் அருகே உலாவந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகாவை இணைக்கும் குடியாத்தம் வனச்சரகத்தில் யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கணவாய் மோட்டூர் கிராம மலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியானது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறை அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவாய் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் ஆடு, மாடுகளை சிறுத்தை தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில், குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபா தலைமையில் மலை அடிவாரம் உள்ள கிராமங்களில் மக்கள் அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்து, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இந்நிலையில் நேற்று கணவாய் மோட்டூர் கிராம மக்கள் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்து பொதுமக்களை தாக்குவதற்கு முன்பாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் சித்ராதேவி விசாரணை நடத்தி, வருவாய் வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்