சிறப்பு படை ரோந்து பணி 3 உடும்பு வேட்டையாடிய 3 பேர் கைது

 

பெரம்பலூர்,ஆக.14: பெரம்பலூர் அருகே மதுரை மாவட்ட வனத்துறையை சேர்ந்த சிறப்புப் படையினர் நடத்திய ரோந்துப் பணியில் 3 உடும்புகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு (WCCB) பிரிவை சேர்ந்த வனக் காப்பாளர்கள் கண்ணதாசன், முகமது சித்தீக் ஆகியோர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஜெமீன் ஆத்தூர் செல்லியம்மன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அரியலூர் மாவட்டம், பொய்யூரை சேர்ந்த பரமசிவம் மகன் பெரியசாமி(50), இவரது மகன் ஐயப்பன்(27) மற்றும் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சரடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் பாக்கியராஜ்(31) ஆகிய மூவரும் சேர்ந்து 3 உடும்புகளை வேட்டையாடியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வனக் காப்பாளர்கள் கண்ணதாசன், முகமது சித்திக் ஆகியோர் பிடிபட்ட 3 பேர்களிடமிருந்து 3 உடும்புகளைக் கைப்பற்றினர். பின்னர் பெரம்பலூர் வனச்சரகத்திற்கு அழைத்து வந்து மூவரையும் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் வனவர் பிரதீப்குமார், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், அன்பரசு ஆகியோர் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, பட்டியல் 1-ல் வகைப்படுத்தப்பட்ட விலங்குகளில் ஒன்றான உடும்பினை வேட்டையாடியதால் மூவரையும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை