சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது: 24 மணி நேரத்தில் பிடித்தது தனிப்படை

புதுக்கோட்டை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம், தலைஞாயிறை சேர்ந்தவர் பூமிநாதன் (55), இவர், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 20ம் தேதி இரவு எஸ்எஸ்ஐ பூமிநாதன், நவல்பட்டு தலைமை காவலர் சித்திரைவேலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் பூலாங்குடி காலனி பகுதியில் 3 பேர் பைக்கில் ஆட்டுடன் வந்துள்ளனர். பைக்கை நிறுத்துமாறு பூமிநாதன் கூறியபோது, ஆட்டை விடுவித்து விட்டு பைக்கில் தப்பினர். அவர்களை விரட்டிச் சென்ற எஸ்எஸ்ஐ பூமிநாதன், கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்க பாலத்துக்கு அடியில் மூவரையும் பிடித்துள்ளார். சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், ஆடு திருடும் கும்பலால் கடந்து செல்ல முடியவில்லை. அப்போது 3 பேரில் ஒருவர், திடீரென பூமிநாதனின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். உடனடியாக அங்கிருந்து அக்கும்பல் தப்பியது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே தோகூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் (19) மற்றும் 2 சிறுவர்கள் நேற்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஒருவன் 5ம் வகுப்பும், மற்றொருவன் 9ம் வகுப்பும் படித்து வந்தனர். மணிகண்டன் கீரனூர் குற்றவியல் நடுவர் மன்றத்திலும், 2 சிறுவர்கள் புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிக்குழுமத்திலும் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொலையான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வீட்டுக்கு நேற்று காலை திருச்சி கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி முன்னாள் எஸ்.பி.மூர்த்தி ஆகியோர் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். இதைபோல், பூமிநாதன் வீட்டுக்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ்  ஆகியோர் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.* துப்புதுலக்க உதவிய எஸ்எஸ்ஐ செல்போன்எஸ்எஸ்ஐ பூமிநாதனின் செல்போனை போலீசார் தேடியபோது கிடைக்கவில்லை. பின்னர் அவருக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்த போது கைதான மணிகண்டனின் தாயிடம் பேசியிருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, அந்த எண்ணை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கினர். இதில், மணிகண்டன் தனது உறவினர் வீடான புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே வடக்குபட்டியில் பதுங்கி இருந்தார். அங்கு மணிகண்டனின் தாயும் இருந்துள்ளார். தொடர்ந்து, மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.* இரவால் சிக்கல்கொலை வழக்கில் கைதான மணிகண்டனின் தாயிடம் பேசுவதற்கு முன்பு எஸ்எஸ்ஐ பூமிநாதன், மற்றொரு எஸ்ஐ சேகரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரம் என்பதால் எஸ்எஸ்ஐக்கு இருப்பிடத்தை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஓரளவுக்கு இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சேகர் வந்து பார்க்கும்போது, ரத்த வெள்ளத்தில் பூமிநாதன் இறந்து கிடந்துள்ளார்.* சுப நிகழ்ச்சிக்காக திருட்டுகொலை வழக்கில் கைதான மணிகண்டன் மற்றும் சிறுவர்களும் உறவினர்கள். தோகூரை சேர்ந்த மணிகண்டன் புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி வடக்குபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போதுதான் நவல்பட்டு பகுதியில் ஆட்டை திருடி, கொலை சம்பவமும் நடந்துள்ளது. அதன் பிறகு மணிகண்டன் மற்றும் சிறுவர்கள் வடக்குப்பட்டிக்கு சென்றுள்ளார்.* செல்போன் அழைப்பு விவரங்களை சேகரிக்க உதவிய டிஐஜிஎஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரமாக களத்தில் இறங்கினர். எஸ்எஸ்ஐ பூமிநாதனுக்கு வந்த செல்போன் அழைப்பு விவரங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தனிப்படை போலீசார் கேட்டுள்ளனர். அவர்கள், காலதாமதம் செய்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், அந்நிறுவனத்திடம் பேசி உடனே அழைப்பு விவரங்களை வாங்கி கொடுத்துள்ளார். இதன் பிறகு குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.* கொலை நடந்தது எப்படி?பள்ளத்துப்பட்டி பகுதியில் 3 பேரையும் எஸ்எஸ்ஐ பூமிநாதன் மடக்கி பிடித்துள்ளார். மணிகண்டன் பற்றிய விவரங்களை கேட்டு, அவரது தாய் செல்போன் எண்ணை கேட்டு அவருக்கு போன் செய்து பேசியுள்ளதாக தெரிகிறது. அப்போது பைக்கில் இருந்த அரிவாள் கீழே விழுந்துள்ளது. திடீரென மணிகண்டன் அரிவாளை எடுத்து பூமிநாதனின் தலையில் பயங்கரமாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.* அறிவியல்பூர்வ சாட்சிகளுடன் குற்றவாளிகள் கைது: திருச்சி சரக டிஐஜி பேட்டிதிருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் நேற்று அளித்த பேட்டி: தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலைய எல்லைக்குள் ஆடு திருடி கொண்டு வந்தபோது, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், தலைமைக் காவலர் சித்திரவேல் ஆகியோர் குற்றவாளிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். அங்கிருந்து தப்பிய குற்றவாளிகள் கீரனூர் அருகே சிக்கியுள்ளனர். அப்போது, 2 சிறுவர்கள் உள்பட 3பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை தாக்கியதாக மணிகண்டன் வாக்குமூலத்தில் தெரித்துள்ளார். மது அருந்தியதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இரண்டு சிறுவர்கள் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. தனிப்படை போலீசார் செல்போன் தொடர்புகளை வைத்து, முற்றிலும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் கைது செய்துள்ளனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நாளை (இன்று) திருச்சி வருகிறார். கொலையான உதவி ஆய்வாளர் குடும்பத்தையும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரையும் நேரில் சந்திக்கிறார். சிறுவர்களின் குற்ற சம்பவங்களைக் குறைக்கும் வகையில் திருச்சி சரகத்தில் ஏற்கனவே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கியது: தமிழகத்தில் 650 பேர் பங்கேற்றனர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு: ரூ.14.90 கோடி வரை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு